நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டார். இதுதொடர்பாக, மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, தனது அறிக்கையை கடந்த நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது. அதில், மஹுவா மொய்த்ராவைப் பதவிநீக்கம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை மக்களவையில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக குரல் வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, எம்.பி. பதவியிலிருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டாா்.
பின்னர், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். இதுதொடர்பான வழக்கு, விசாரணையில் உள்ளது. இதனிடையே அவா் எம்.பி.யாக இருந்தபோது, டெல்லியில் பயன்படுத்தி வந்த அரசு இல்லத்தை ஜனவரி 7ஆம் தேதிக்குள் காலிசெய்யுமாறு மத்திய வீட்டுவசதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் எஸ்டேட்ஸ் இயக்குநரகம் கடந்த டிசம்பர் 11இல் மஹுவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த உத்தரவை எதிா்த்து டெல்லி உயா்நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் அரசு இல்லத்தைக் காலி செய்திருக்கிறார்.
9பி என்ற அரசு இல்லத்தில் மஹுவா மொய்த்ரா வசித்து வந்த நிலையில், இன்று காலை அதிகாரிகள் முன்னிலையில், அவர் அரசு இல்லத்தை காலி செய்ததாகவும், வெளியேற்றம் போன்ற நடவடிக்கைகள் எதுவும் இல்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசு இல்லத்தின் பொறுப்புகள் அனைத்தும் அரசு இல்லங்களுக்கான இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது