இந்தியா

கேஸ் விலை உயர்வு - ஸ்மிருதி இரானியிடம் விமானத்தில் கேள்வியெழுப்பிய மகிளா காங்கிரஸ் தலைவர்

கேஸ் விலை உயர்வு - ஸ்மிருதி இரானியிடம் விமானத்தில் கேள்வியெழுப்பிய மகிளா காங்கிரஸ் தலைவர்

ஜா. ஜாக்சன் சிங்

கேஸ் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் விமானப் பயணத்தின் மகளிர் காங்கிரஸ் தலைவர் நேத்தா டிசோசா கேள்வியெழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்காக, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போாரட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், கொரோனா ஊரடங்கு, உக்ரைன் போர் ஆகியவை பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதித்துள்ளதால், எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து அசாமின் குவாஹாட்டி நகருக்கு செல்வதற்காக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று விமானத்தில் சென்றார்.

அவருடன் மகளிர் காங்கிரஸ் தலைவர் நேத்தா டிசோசாவும் பயணித்தார். குவாஹாட்டி விமான நிலையம் வந்ததும், அனைத்து பயணிகளும் விமானத்தை விட்டு இறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஸ்மிருதி இரானியை வழிமறித்த டிசோசா, "சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து கொண்டே செல்வதற்கு காரணம் என்ன?" என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த ஸ்மிருதி, "நாட்டு மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. 100 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது" என்றார். இதனை கேட்ட டிசோசா, "இது நான் எழுப்பிய கேள்விக்கான பதில் இல்லையே" எனக் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே விமானத்தில் வைத்தே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், சமையல் எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவது குறித்து நேத்தா டிசோசா வினவினார். அதற்கு, "தயவுசெய்து பொய் பேசாதீர்கள்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து ஸ்மிருதி இரானி சென்றார். இந்த சம்பவத்தை இருவருமே தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.

ஆனால், டிசோசாவே முதலில் இதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.