இந்தியா

பாஜகவில் இணைகிறாரா மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா?

பாஜகவில் இணைகிறாரா மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா?

நிவேதா ஜெகராஜா

நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை சார்பில் கடந்த மே 29-ம் தேதி கட்சி சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அந்தப் பட்டியலில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கட்சியின் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான் உள்ளிட்டோருக்கு மீண்டும் கட்சித்தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது தெரியவந்தது. அதே நேரத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும் செய்தி தொடர்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட புதுமுகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு `இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்’ என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், மீண்டும் மூத்த தலைவர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். குறிப்பாக பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நக்மா கட்சி தலைமையின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நக்மா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், `கட்சியில் இணைந்தபோது 2003-2004 ஆண்டுகளில் மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியா காந்தி உறுதி அளித்திருந்தார். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளாகியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவில் இருந்து இம்ரானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா’ என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், நடிகை நக்மா காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.