இந்தியா

மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து விலகல்

மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து விலகல்

Veeramani

முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யும், மகிளா காங்கிரஸின் தலைவருமான சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுஷ்மிதா தேவ் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அளித்துள்ளார். சுஷ்மிதா தேவின் கடிதத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. பொது சேவையின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ளதாக மட்டும் தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பயோவில்  “காங்கிரஸின் முன்னாள் உறுப்பினர்" என்று மாற்றியுள்ளார்.

சுஷ்மிதா தேவ், அசாமில் ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்தோஷ் மோகன் தேவின் மகள் ஆவார். இவர் அசாமில் வங்காள மொழி பேசும் பராக் பள்ளத்தாக்கில் காங்கிரஸின் முகமாக கருதப்பட்டார். சுஷ்மிதா தேவ் பாஜகவில் சேருவது பற்றிய யூகங்களை பாஜக மறுத்துள்ளது. இந்த சூழலில் சுஷ்மிதா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரின் மருமகன் அபிஷேக் பானர்ஜியை சந்திக்க  கொல்கத்தா செல்கிறார். அவர் திரிணாமூல் காங்கிரஸில் இணைவார் என்று கூறப்படுகிறது. அசாமில் திரிணாமூல் காங்கிரஸின் முகமாக சுஷ்மிதா இருப்பார் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.