இந்தியா

“மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குங்கள்” - மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

“மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குங்கள்” - மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

Veeramani

மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கக்கோரி, மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய், மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தார்.

இது தொடர்பாக சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான சுபாஷ் தேசாய் பேசுகையில், “இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் சமஸ்கிருதம் ஆகிய ஆறு மொழிகளுக்கு இந்திய அரசால் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது குறித்து முடிவெடுக்க நிபுணர் குழுவை அமைத்தோம். அந்த குழு அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது. மத்திய அரசால் நிறுவப்பட்ட இலக்கிய அகாடமியும் இது தொடர்பாக மொழியியல் நிபுணர் குழுவை அமைத்தது, இந்த குழுவும் இந்த கோரிக்கை சரியானது என்றது.மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இது தொடர்பாக இன்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மகாராஷ்டிரா அனைத்து ஆதாரங்களையும் வழங்கியதில் மகிழ்ச்சி அடைவதாகவும், மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இதற்கு மத்திய அரசு எப்படி முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வரும் பிப்ரவரி 27 மராத்தி மொழி தினம், அதற்குள் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்'' எனத் தெரிவித்தார்

செம்மொழி கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 4,000 அஞ்சல் அட்டைகளை அனுப்பியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்துள்ளது