யோகி ஆதித்யநாத், பங்கஜ முண்டே, அஜித் பவார் pt web
இந்தியா

மகாராஷ்டிராவில் சம்பவம் செய்த யோகி... பாஜக மற்றும் அதன் கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்! என்ன நடக்கிறது?

தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கான பரப்புரையில் வகுப்புவாத முழக்கங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, பரப்புரையே வேறு ஒரு தளத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது.

Angeshwar G

இந்திய தேர்தல் களத்தில், சமூக வலைதளங்கள்தான் அரசியல் கட்சிகளின் பிரதான பரப்புரை ஊடகம் என்றானபின், ஒவ்வொரு கட்சியும் தங்களது பிரசாரங்களை அதற்குத் தகுந்தவாறு மாற்றி வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தேர்தலின்போதும், அப்போதைய தேவையை ஒட்டியே அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் அமையும். அக்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடங்கி, அக்கட்சித் தலைவர்களின் பேச்சுக்கள் வரை மொத்தமும் ஒரே தளத்தில் இருக்கும்...

மத்தியில் காங்கிரஸ் அல்லாது ஆட்சியை அமைக்கும் அரசுகள் சில காலங்களில் அடுத்தடுத்து கவிழ்ந்தன. பிரதமர்கள் மாறிகொண்டே இருந்தனர். அப்போதெல்லாம், காங்கிரஸ் ‘நிலையான ஆட்சி’ என்பதை பலமுறை முழக்கமாக வைத்துள்ளது. பிரதமர் வாஜ்பாய் முன்வைத்த ‘இந்தியா ஒளிர்கிறது’ எனும் முழக்கத்தையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கூட கடந்த மக்களவைத் தேர்தலின் போது திமுக தலைவர் முக ஸ்டாலின், ‘இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்...’ எனும் முழக்கத்தைப் பயன்படுத்தினார். இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கு தக்கவாறும் அம்மாநில கட்சிகள் ஒரு முழக்கத்தை முன் வைக்கின்றன.

பிளவுபட்டால் நாம் வீழ்ச்சி அடைகிறோம்

இதற்கிடையேதான் தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சுக்கள் வளர்ச்சி, வேலைவாய்ப்பு இவற்றையெல்லாம் தாண்டி, வகுப்புவாத முழக்கங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, பரப்புரையே வேறு ஒரு தளத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது.

யோகி ஆதித்யநாத்

மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார். தனது பரப்புரையில் ‘பட்டேங்கே தோ கட்டங்கே' எனும் முழக்கத்தை பயன்படுத்துகிறார். இதன் பொருள் ‘பிளவுபட்டால் நாம் வீழ்ச்சி அடைகிறோம்’ என்பதாகும். தற்போது மகாராஷ்டிராவில் பல பாஜக தலைவர்களால் இந்த முழக்கம் பயன்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடியும் இந்த முழக்கத்தை சிறிது மாற்றி, நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் என பேசி வருகிறார்.

தவறாக புரிந்து கொள்ளப்பட்டது

பாஜகவின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக மக்களை பிரித்து பலவீனப்படுத்த முயற்சிக்கிறது என்பதாகும். மகாராஷ்டிர பாஜகவின் பிற தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் யோகியின் இந்த பரப்புரை முழக்கத்தின் மீது விமர்சனம் இருந்தாலும், அம்மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், முழக்கத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். முழக்கம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்றும், முழக்கத்தின் முழு அர்த்தம் ஒற்றுமைதான் என்றும் கூறி வருகிறார்.

பங்கஜ முண்டே

மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜ முண்டே, யோகியின் முழக்கத்திற்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். “எனது அரசியல் வேறு. ஒரே கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காகவெல்லாம் நான் ஆதரிக்க மாட்டேன். நாம் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். இதுபோன்ற பேச்சுக்களை மகாராஷ்டிராவில் கொண்டு வரத் தேவையில்லை” என தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் இந்த முழக்கம் வேலை செய்யாது 

பாஜக கூட்டணிக் கட்சித் தலைவராக அஜித் பவார், “நான் இந்த பேச்சுக்களை ஆதரிக்கவில்லை. இது உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற வேறு மாநிலங்களில் வேண்டுமானால் வேலை செய்யலாம். மகாராஷ்டிராவில் வேலை செய்யாது என்பதை நான் பலமுறை கூறியுள்ளேன். மகாராஷ்டிரா என்பது புனிதர்கள் சிவாஜி, பாபாசாகேப் அம்பேத்கர் போன்றோரின் மாநிலம். அவர்களது போதனைகள் எங்களது ரத்தத்தில் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே

பாஜகவின் இந்த சிக்கல்களை காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டுள்ளது. அதன்படி “யோகியின் முழக்கம், பிரிவினை முழக்கமா அல்லது பிரதமர் மோடியின் ஒற்றுமை முழக்கமா? இருவரும் பேசி, இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

திசைதிருப்பவே முழக்கங்கள்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா இதுதொடர்பாக கூறுகையில், “அடிப்படைப் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப கட்டங்கே, வாக்கு ஜிகாத் போன்ற முழக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன” என குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் ஆய்வாளர்களோ, பாஜக தலைவர்களின் கருத்துக்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், ஆதித்யநாத்தின் இந்த முழக்கம் மகாயுதி கூட்டணிக்கு ஆபத்தாக இருக்கும் என்கின்றனர்.

நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் களத்தில் 4140 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.