Death pt desk
இந்தியா

மகாராஷ்டிரா|ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கேட்ட கணவர் குடும்பம்.. இளம் பெண் மருத்துவர் எடுத்த சோக முடிவு!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம், அவரது கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும், நாடு முழுவதும் இன்றும் பல வீடுகளில் வாங்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. தவிர, கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்கள் சித்ரவதை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம், அவரது கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பீட் நகரில் வசித்துவருபவர் நிலேஷ் வர்கேட். ரஷ்யாவில் மருத்துவம் படித்த இவருக்கும் மருத்துவரான பிரியங்கா பும்ரேவுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான இரு மாதங்களிலேயே தனியாக மருத்துவமனை கட்டித் தர வேண்டும் என்றும், கூடுதலாக ரூ.1 கோடி வரதட்சணை தர வேண்டும் என்றும் நீலேஷ், அவரது பெற்றோா், சகோதரா், சகோதரி ஆகியோா் வலியுறுத்தி வந்துள்ளனா்.

இதையும் படிக்க: செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு | எலான் மஸ்க் - முகேஷ் அம்பானி மோதல்.. மத்திய அரசு அதிரடி முடிவு!

பிரியங்காவின் பெற்றோரால் அவா்கள் கேட்ட தொகையை உடனடியாக கொடுக்க முடியவில்லை. இதையடுத்து, நீலேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினா் பிரியங்காவை உடல்ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரியங்காவின் பெற்றோா் காவல் துறையில் புகாா் அளித்தனா். பின்னா் பிரியங்காவை பெற்றோரின் வீட்டுக்கு கணவரின் குடும்பத்தாா் அனுப்பிவிட்டனா்.

சடலம்

எனினும், பிரியங்காவை கைபேசியில் தொடா்புகொண்டு கணவா் மற்றும் அவரின் குடும்பத்தினா் கூடுதல் வரதட்சணை தொகை குறித்து கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பிரியங்கா தனது வீட்டு மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, பிரியங்காவின் கணவா் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதையும் படிக்க: எகிப்து|கிரேட் பிரமிடு உச்சியில் இருந்த நாய்; பாராகிளைடிங்கில் பறந்த நபர் படம்பிடித்த ’வாவ்’ காட்சி!

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.