மகாராஷ்டிரா முகநூல்
இந்தியா

ஏன் இந்த விபரீதம்! செல்ஃபி எடுக்க முயன்று மலையில் இருந்து 100அடி ஆழத்தில் தவறி விழுந்த பெண்! வீடியோ

ஜெனிட்டா ரோஸ்லின்

மகாராஷ்டிராவில் செல்ஃபி எடுக்கும்போது 100அடி ஆழத்தில் தவறி விழுந்த பெண், மீட்புக்குழுவின் உதவியுடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக செல்ஃபி மோகத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண் செல்ஃபி எடுக்கும்போது பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் என்ற நீர்வீழ்ச்சியை காண்பதற்காக 26 வயது நிரம்பிய நஷ்ரீன் அமீர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

ஆனால், வெகுநாட்களாக மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் கனத்த மழை பெய்து வரும் சூழலில், நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், நஷ்ரீன் அருகில் இருந்த போர்ன் காட் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று செல்ஃபி எடுப்பதற்காக முயன்றுள்ளார்.

அப்போது, நிலைத்தடுமாறிய நஷ்ரீன், 100 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனை கண்ட அவரின் நண்பர்கள் அருகிலிருந்தவர்களை உதவிக்காக அழைத்துள்ளனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் அருகில் இருந்த சிலரும், மலையேற்ற மீட்புக்குழுவினர் சிலரும் நீண்ட தடிமனான கயிறு ஒன்றின் உதவி கொண்டு அப்பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பலத்த காயமடைந்த அவர், வலியை பொறுக்க இயலாது கதறி அழுவதையும் காண முடிகிறது. இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு அழைத்து செல்லப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பெற்றநிலையில், தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்பி எடுக்க முயன்ற விபத்துள்ளான சம்பவங்களில் இது புதிதல்ல...

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் இருக்கும் மங்கானில் புகழ்பெற்ற கும்பே நீர்வீழ்ச்சியின் அழகை வீடியோ எடுப்பதற்காக தனது நண்பர்கள் ஏழு பேருடன் சென்ற இன்ஸ்டாகிராம் இன்ஃப்யென்சரான பெண் ஒருவர்... அங்கு பள்ளத்தாக்கின் நுனியில் நின்று வீடியோ எடுத்தபொழுது கால் தவறி 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பமும் அரங்கேறியுள்ளது.