மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் புருஷோத்தம் புட்டேவார் (82). இவரது மகன் மணீஷ். இவர் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அர்ச்சனா. இவர், நாக்பூரில் நகரமைப்புத் துறையில் உதவி இயக்குநராக உள்ளார்.
இந்த நிலையில், புருஷோத்தம் புட்டேவாருக்கு 300 கோடி ரூபாய் மதிப்பில் குடும்பச் சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அபகரிக்க மருமகளான அர்ச்சனா சதி திட்டம் தீட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக அரச்சனா, தன் கணவரின் கார் டிரைவர் உதவியுடன் இச்சதி திட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, தன் மாமனாரைக் கொலை செய்வதற்காக ரூ.1 கோடி கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக தன் கணவரின் கார் டிரைவரிடம் பணம் கொடுத்து கார் வாங்கியதுடன், அதன்மூலம் அவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அதாவது ஒரு விபத்துபோல் காட்ட முயற்சி செய்துள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் புருஷோத்தம் புட்டேவார் உயிர் பிழைத்தார். தற்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த போலீசார் விசாரணையில்தான் இந்தப் புதிய தகவல் வெளிவந்துள்ளது. தற்போது அர்ச்சனாவுடன் கார் டிரைவரும், உடந்தையாக இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: தமிழக பாஜகவில் உட்கட்சி பூசலா? மேடையில் தமிழிசையைக் கண்டித்த அமித் ஷா.. #ViralVideo
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நகரமைப்புத் துறையின் பராமரிப்பு பணிகளின்போது அர்ச்சனா பெரும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்மீது பலமுறை புகார்கள் அனுப்பப்பட்டும், அவரது அரசியல் தொடர்பு காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விதிமுறைகளை மீறி அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாமனாரின் கொலை முயற்சி வழக்கிற்கு அவர் உடந்தையாக இருந்ததால், முறைகேடுகள் கொடுத்த வழக்கும் சூடுபிடிக்கும் எனக் கூறப்படுகிறது.