மக்களவை தேர்தல் - மகாராஷ்ட்ரா அரசியல் களம் PT Web
இந்தியா

மகாராஷ்டிரா அரசியல் களம் - மக்களின் தீர்ப்பு ஏற்படுத்திய திருப்பம்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கவனிக்க வேண்டிய மாநிலங்களில் மகாராஷ்ட்ரா முக்கியமானது. இங்கு சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவுபட்டு தேர்தலை சந்தித்த நிலையில், ஒரிஜினல் கட்சிகளுக்கே மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

PT WEB

நாட்டின் முக்கிய வர்த்தக மையமான மகாராஷ்ட்ராவில் இம்முறை அரசியல் களம் வேறு வகையாக இருந்தது. கடந்தமுறை அங்கு மக்கள் வாக்களித்து மாநில அரசை தேர்ந்தெடுத்தபிறகு நடந்த பிளவுகளும், அரசியல் துரோகங்களும் பல திருப்பங்களை ஏற்படுத்தியிருந்தது.

மகாராஷ்ட்ரா மக்களவை தொகுதிகள்

நீடித்து வந்த அரசியல் குழப்பம்!

அங்கிருந்த அரசியல் நிலவரங்களின்படி,

ஒருபுறம் பால்தாக்ரே தொடங்கிய சிவசேனா கட்சி பிளவுபட்டு உத்தவ் தாக்கரே பிரிவு, ஏக்நாத் ஷிண்டே பிரிவு என்றானது.

மறுபுறம் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு சரத்பவார் பிரிவு, அஜித் பவார் பிரிவு என்றானது. சரத்பவாரிடம் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவாரே உண்மையான தேசியவாத காங்கிரஸாக அங்கீகரிக்கப்பட்டார். துணை முதலமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் அவருக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னமும் தரப்பட்டது.

அதேபோல உத்தவ் தாக்ரே வசமிருந்த சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்றவர்களே உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டனர். அக்கட்சிக்கே சிவசேனாவின் சின்னம் ஒதுக்கப்பட்டது. இத்தனைக்கும் பின்னணியில் பதவிக்கணக்குகளும், பாரதிய ஜனதாவும் இருந்தன.

மக்களவை தேர்தலில் அமைந்த புது கூட்டணி... ஆதரவளித்த மக்கள்!

இச்சூழலில் நடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் உத்தவ் தாக்ரே தலைமையில் காங்கிரஸ், சரத்பவார் பிரிவு இணைந்து உருவாக்கிய மகா விகாஸ் அகாதி, 30 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இக்கூட்டணியில், காங்கிரஸ் 13 தொகுதிகளையும் சிவசேனா உத்தவ் தாக்ரே பிரிவு 9 தொகுதிகளையும் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவு 8 தொகுதிகளையும் கைப்பற்றின. பாரதிய ஜனதா கட்சி 9 தொகுதிகளையும், சிவசேனா ஏக்நாத் ஷின்டே பிரிவு 7 தொகுதிகளை பிடித்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவு ஒரு இடத்தை மட்டும் பிடித்தது.

சுயேச்சை ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார். குறிப்பாக, பாரமதி தொகுதியில், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா போட்டியிட்டார். குடும்பத்தினரிடையேயான இந்த போட்டியில் சுப்ரியா சுலே வெற்றிபெற்றார். இதன் மூலம் மராட்டிய மக்களின் தீர்ப்பு வெளிப்படையாகி இருக்கிறது.

இந்நிலையில் புதிதாக மக்களவைக்கு தேர்வாகி உள்ள எம். பிக்களை சரத்பவார் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதேபோல அஜித்பவாரும் கட்சியின் மூத்தத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மக்களவைத் தேர்தல் தோல்வியை பெரிதாக கருதாமல் சட்டப்பேரவைத்தேர்தலுக்கு தீவிரமாக செயலாற்றப்போவதாக அவர் கூறியுள்ளார். ஆனால், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி, அவரிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் தாய்க்கட்சிக்கு வரும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக களத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்பவாருடன் சென்றவர்கள் மீண்டும் சரத்பவாரிடம் வரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் அக்டோபர் மாதம் மகாராஷ்ட்ராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் வாக்காளர்கள் அளித்துள்ள தீர்ப்பு அங்குள்ள அரசியல் களத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.