மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லலித்குமார் சால்வே. அம்மாநில காவல்துறையில் பணிபுரியும் இவர், ஆண் குழந்தைக்கு தந்தையாகியிருப்பதுதான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. இதன் ஆச்சர்யம் என்னவென்றால், லலித் குமார் சால்வே பெண்ணாக பிறந்து பாலின மாற்று அறுவைசிகிச்சை மூலம் ஆணாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1988-ஆம் ஆண்டு பிறந்த லலித்குமார் சால்வே, 2010-ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநில காவல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். அதன்பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டு அவர், தன்னுடைய உணர்வில் அதிகப்படியான மாற்றங்களை உணர்ந்துள்ளார். இதன் மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு Y குரோமோசோம்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பெண்களுக்கு உடலில் இரண்டு ‘X’ குரோமோசோம்கள் இருக்கும். ஆண்களுக்கு ‘X’, ‘Y’ என்ற குரோமோசோம்கள் இருக்கும். இதனைத் தொடர்ந்து லலித்குமார் கடந்த 2018-ல் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அதற்குப் பிறகுகூட அவருக்கு 2 அறுவைச்சிகிச்சைகள் செய்யப்பட்டன.
பாலின மாற்று அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு லலித் குமார் புதிய பயணத்தைத் தொடங்கினார். கடந்த 2020-ஆம் ஆண்டு சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த சீமா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஜனவரி 15-ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சந்தோஷ தருணத்தை அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து லலித் குமார் சால்வே, "பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய எனது வாழ்க்கை பல்வேறு போராட்டங்கள் நிறைந்தது. இந்தக் காலகட்டங்களில் எனக்கு ஆதரவளிக்கும் மக்களை நான் பெற்றிருப்பதை ஆசீர்வதமாக உணர்கிறேன். எனது மனைவி சீமா குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். நான் இப்போது தந்தையாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என மகிழ்ச்சிப்பொங்க தெரிவித்துள்ளார்.