போலி ஆவணங்கள் எக்ஸ் தளம்
இந்தியா

எல்லை தாண்டிய காதல் | காதலரை மணமுடிக்க போலி ஆவணத்தில் பாக். சென்ற இந்தியப் பெண்; விசாரணையில் அம்பலம்

Prakash J

உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களுடன் பழகி அவர்கள்மீது காதல் வயப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது. அப்படி சமூக வலைதளங்களில் கிடைக்கும் காதலுக்காக தங்களது இனம், மதம், மொழியை துறந்து நாடுவிட்டு நாடு செல்வோர் பற்றிய செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில், காதலுக்காக நாடுவிட்டுச் சென்ற இந்தியப் பெண் ஒருவர், போலி ஆவணங்கள் கொடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், தானேவைச் சேர்ந்தவர் சனம் கான். திருமணமான அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர், கொடுமைப்படுத்தியதைத் தொடர்ந்து அவருடன் வாழப் பிடிக்காமல் தன் தாய்வீடான தானேவுக்குத் திரும்பியுள்ளார். இதற்கிடையே பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இன்ஸ்டா மூலம் பழகிய அப்பெண், பின்னாளில் அவரிடம் காதல் வயப்பட்டார்.

அந்தக் காதலரைக் காண்பதற்காக கடந்த ஆண்டு, தனது இரண்டு குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்குச் சென்று பார்த்துள்ளார். ஒரு மாத விசாவில் பாகிஸ்தான் சென்றிருந்த அவர், காதலரைப் பார்த்தபிறகு அவரைத் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்துள்ளார். இதற்காக அங்கேயே ஆறு மாதங்கள் தங்கியிருக்க முடிவு செய்த அவர், அதற்காக விண்ணப்பித்தும் உள்ளார். ஆனால், அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதையும் படிக்க: அதிபர் தேர்தல் | கருத்துக்கணிப்பில் ட்ரம்பை முந்திய கமலா ஹாரீஸ்.. பரபரக்கும் அமெரிக்க அரசியல் களம்!

இதையடுத்து, நாடு திரும்பிய அவர் போலி ஆதார் அட்டை, பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைத் தயாரித்து, போலியான பெயரில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இப்படி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் சரிபார்ப்பை முடித்த அவர், கடந்த ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில்தான், அவருடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வந்துள்ளது.

இதையடுத்து பாகிஸ்தானில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தங்கியிருந்த அவர், உடனே நாடு திரும்பியுள்ளார். பின்னர் மீண்டும் பாகிஸ்தான் செல்ல விசாவை நீட்டிக்க முயன்றபோதுதான், அவர் போலி ஆவணங்கள் கொடுத்திருப்பது ஏஜென்சியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலி ஆவணங்கள் தயாரிக்க பெண்ணுக்கு உதவிய தொழிலதிபர் ஒருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: அமெரிக்கா | அதிபர் தேர்தலிலிருந்து விலகியது ஏன்? ஜோ பைடன் விளக்கம்!