மனோஜ் ஜராங்கே எக்ஸ் தளம்
இந்தியா

மராத்தா இடஒதுக்கீடு|மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய மனோஜ்.. தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

மகாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜராங்கே மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

Prakash J

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினரை சமூக, கல்விரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்டகாலமாக நிலுவையில் இருந்ததை அடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜராங்கே, இடஒதுக்கீடு கோரி கடுமையாகப் போராடி வருகிறார். அவ்வப்போது உண்ணவிரதப் போராட்டங்களையும் நடத்தினார்.

கடந்த ஜனவரி 20ஆம் தேதி, ஜல்னா மாவட்டத்தில் இருந்து மும்பை நோக்கி மனோஜ் ஜராங்கே நடைப்பயணத்தைத் தொடங்கியதுடன், 15,000 பேர் சுமார் 750 வாகனங்களில் சென்றனர். இதனால் மும்பையே ஸ்தம்பித்தது. அப்போது, ’தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மும்பையின் ஆசாத் மைதானத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்’ என்று மனோஜ் ஜராங்கே எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தது. இதனையடுத்து, மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜுக்கு பழச்சாறு கொடுத்து அவரது உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி, மகாராஷ்டிரத்தில் மராத்தா பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மராத்தா இடஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க: ”பணியின் உணவு இடைவேளையில் கூட உடலுறவு கொள்ளலாம்..” - ரஷ்ய அரசு பிறப்பித்த உத்தரவின் பின்னணி என்ன?

இந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்கீழ் மராத்தா சமூகத்தினருக்கு அரசு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கோரி, மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜராங்கே பாட்டீல், மீண்டும் இன்றுமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பதாக ஆங்கில ஊடகமான பி.டி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது. சத்ரபதி சம்பாஜிநகரில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் இன்று நள்ளிரவு முதல், அவர் போராட்டத்தை தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், “மராத்தியர்களுக்கான இடஒதுக்கீட்டை மகாராஷ்டிரா அரசு வேண்டுமென்றே தடுத்து வருகிறது. மராத்தா சமூகத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

விரைவில், மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி அரசு, அதிக தொகுதிகளை இழந்ததற்குக் காரணம், மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்தான் எனக் கூறப்படுகிறது. இது, சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: உ.பி. | ”அப்பாவிகளை ஏன் கைது செய்தீர்கள்?” கண்டித்த நீதிபதி.. விபரீத முடிவு எடுத்த உதவி ஆய்வாளர்!