ரத்த தானம் செய்ய 400 கி.மீ பயணித்தவர் புதிய தலைமுறை
இந்தியா

அரிய வகை ரத்தத்தை தானம் செய்ய சுமார் 400 கிமீ பயணித்த நபர்... எங்கே? எப்போது?

சுமார் 400 கிமீ பயணம் செய்து, அரியவகை ரத்த வகையை ‘பாம்பே ப்ளட் க்ரூப்’ ரத்தத்தை தானம் செய்து பெண்ணின் உயிரை காப்பாற்றி உள்ளார், மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஜெனிட்டா ரோஸ்லின்

மத்தியப் பிரதேசம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சமீபத்தில் ஆபரேஷன் செய்வதற்காக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபரேஷனின் போது, அப்பெண்ணுக்கு ஓ பாசிட்டிவ் ரத்தவகை என்று கருதி, ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ரத்தம் செலுத்தப்பட்டும் இப்பெண்னின் உடல்நிலை சரியாகாமல் மோசமாகியுள்ளது. இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் இப்பெண்ணை அனுமதித்துள்ளனர். அப்போதுதான், இப்பெணுக்கு அரிய ரத்த வகையான BOMBAY BLOOD GROUP எனப்படும் H' க்ரூப் வகை ரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது.

BOMBAY BLOOD GROUP

இந்தவகையான ரத்தவகை இந்தியாவில் 60 ஆயிரம் பேரில் ஒருவருக்குதான் இருக்கும் என மருத்துவர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றது. மிகவும் அரிதான இந்த ரத்தவகை கிடைக்காமல் இப்பெண் அவதியடைந்துள்ளார். இந்நிலையில், சரியான நேரத்தில் மகாரஷ்டிராவை சேர்ந்த ரவீந்திர அஷ்டேகர் என்பவர் இப்பெண்னுக்கு ரத்த தானம் செய்துள்ளார்.

மகாரஷ்டிரா மாநிலட்தில் ஷீரடியில் மொத்த பூ வியாபாரியாக இருக்கும் 36 வயதான ரவீந்திர அஷ்டேகர் என்பவர், மகாராஷ்டிராவில் இருந்து சுமார் 400 கிமீ தனது நண்பரின் காரில் பயணித்து சரியாக மே 25 ஆம் தேதி இப்பெண்னுக்கு ரத்த தானம் செய்துள்ளார்.

ரத்த தானம் செய்த ரவீந்திர அஷ்டேகர்

இதனையடுத்து, அப்பெண்ணுக்கு உடல் நிலை சீரடைந்துள்ளது. இந்நிலையில், இவ்வளவு தூரம் பயணித்து ரத்த தானம் வழங்கிய ரவீந்திர அஷ்டேகருக்கு, மக்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ரவீந்திர அஷ்டேகர் அளித்துள்ள பேட்டியில், “வாட்ஸ்அப்பில் ரத்த தானம் செய்பவர்களின் குழு மூலம் இந்த பெண்ணின் மோசமான நிலை குறித்து எனக்கு தெரிந்தது. உடனடியாக நான் சுமார் 440 கிலோமீட்டர் பயணம் செய்துவிட்டேன். ஒரு நண்பரின் காரில்தான் இந்தூருக்கு புறப்பட்டேன். இப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றியதில் என் தரப்பிலிருந்தும் சிறு பங்கு உள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இந்த அரிய வகை ரத்த தானம் அப்பெண்ணுக்கு கிடைக்காமல் போயிருந்தால், அவரது உயிருக்கே அது ஆபத்தாக இருந்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BOMBAY BLOOD GROUP என்றால் என்ன?

இந்த ரத்த வகையின் பெயர், 'BOMBAY BLOOD GROUP'. மருத்துவ உலகில் இந்த வகையை, 'H' க்ரூப் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த பாம்பே ப்ளட் க்ரூப், முதல்முறையாக கண்டறியப்பட்டது, இப்போது மும்பை என்று அழைக்கப்படும் பம்பாயில். இதன் காரணமாகவே 'பாம்பே ப்ளட் க்ரூப்' என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த க்ரூப் ரத்தம் இருப்போர், எல்லா வகை ரத்தம் கொண்டோருக்கும் ரத்த தானம் செய்யலாம். ஆனால் பாம்பே ப்ளட் க்ரூப்பினருக்கு அதே க்ரூப் ரத்தம்தான் சேரும். இந்தியாவில் பாம்பே ப்ளட் க்ரூப் அரிதாக இருப்பதால், அதே க்ரூப்பினருக்கு மட்டுமே ரத்த தானம் செய்யும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.