தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே, சரத்பவார் pt web
இந்தியா

மகாராஷ்டிரா: இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்காத முக்கிய கட்சிகள்.. 12% மக்கள்தொகை இருந்தும்?

முக்கிய கட்சிகளில் இஸ்லாமியர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்துள்ள காங்கிரஸ் கட்சியிலேயே மொத்தம் ஒன்பது இஸ்லாமிய வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர்.

கணபதி சுப்ரமணியம்

மகாராஷ்டிரா தேர்தல்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் களத்தில் "இஸ்லாமிய வாக்கு வங்கி" எத்தகைய பங்காற்றுகிறது என்பதை பெரும்பாலான கட்சிகள் வெளிப்படையாக பேச தயங்கும் நிலையில், சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை என்கிற புகாருக்கு மௌனமே பதிலாக உள்ளது.

நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் களத்தில் உள்ள 4140 வேட்பாளர்களில், 420 நபர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில் ஒரு பாதி சுயேச்சை வேட்பாளர்கள் என்பதும் ஒரு பாதி மட்டுமே தேர்தல் களத்தில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதிலும் கிட்டத்தட்ட 150 இஸ்லாமிய வேட்பாளர்கள் சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளாக போட்டியிடுகின்றனர்.

முக்கிய கட்சிகளில் இஸ்லாமியர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்துள்ள காங்கிரஸ் கட்சியிலேயே மொத்தம் ஒன்பது இஸ்லாமிய வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர். மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கமாக உள்ள சிவசேனா உத்தவ் தாக்கரே அணி ஒரே ஒரு இஸ்லாமிய வேட்பாளருக்கு மட்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

அதே சமயத்தில் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 16 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. சமாஜ்வாதி கட்சி தனது மாநில தலைவரான அபூ ஆஸ்மி உள்ளிட்டவருக்கு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய மக்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை

மகாயூதி கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஒரு இஸ்லாமிய வேட்பாளர் கூட களம் இறங்கவில்லை. சிவ சேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவு சார்பாக ஹாருண் கான் மட்டுமே ஒரே இஸ்லாமிய பிரதிநிதியாக களத்தில் உள்ளார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் பிரிவு 5 இஸ்லாமியர்களுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர் நவாப் மலிக், அவரது மகள் சனா மலிக், மற்றும் சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்நோய் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட பாபா சித்திக்கியின் மகன் ஈசான் சித்திக் ஆகியோர் அஜித் பவார் பிரிவு வேட்பாளர்களில் அடக்கம். குறிப்பாக நவாப் மலிக் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதை பாரதிய ஜனதா கட்சி எதிர்த்தாலும், அஜித் பவார் அவருக்கு தனது கட்சி சார்பாக போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார்.

நவாப் மாலிக்

மஹாராஷ்டிராவில் நேரடி போட்டியில் உள்ள இரண்டு கூட்டணிகளுமே இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை என்பது அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வருத்தம். அதிலும் இஸ்லாமிய சமுதாய மகளிருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

12% மக்கள் இஸ்லாமியர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் இதில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளில் இஸ்லாமியர் ஆதரவை அதிகம் பெறும் வேட்பாளரே வெற்றி பெறக்கூடிய சூழல் உள்ளது. உதாரணத்துக்கு மத்திய மாலேகான் தொகுதியில் 78 சதவிகிதம் வாக்காளர்கள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல் மன்குரத் சிவாஜி நகர் சட்டமன்ற தொகுதியில் 53 சதவீதம் வாக்காளர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். கிழக்கு பிவண்டி தொகுதியில் 51% மற்றும் மேற்கு பிவண்டி தொகுதியில் 49.5% என இஸ்லாமிய சமுதாயத்தினரின் ஆதிக்கம் உள்ளது. மும்பா தேவி தொகுதியில் கிட்டத்தட்ட 51% வாக்காளர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

இதேபோல் மேற்கு அவுரங்கபாத், மத்திய அவுரங்காபாத், தாராவி, மும்ரா கல்வா, பைகுலா, அகோலா மற்றும் அமராவதி போன்ற தொகுதிகளில் இஸ்லாமிய சமுதாயத்தினர் வாக்கு வெற்றி தோல்வியை முடிவு செய்வதாக மகாராஷ்டிரா அரசியல் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 12.5 கோடி ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 12 சதவிகிதம் இஸ்லாமியர். இதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள். ஆனால் மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு 2019 ஆம் வருடத்திலேயே 10 இஸ்லாமியர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1999 ஆம் வருடம் 12 ஆக இருந்த இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2004 சட்டமன்றத் தேர்தலில் பதினொன்றாக குறைந்தது.

சுவாரசியமான போட்டி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 150 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு இஸ்லாமிய வேட்பாளர் கூட களத்தில் இல்லை. பெரும்பாலான இஸ்லாமிய சமுதாய பிரதிநிதிகள் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலேயே போட்டியிடுகிறார்கள். உதாரணத்துக்கு மத்திய மலேகான் தொகுதியில் 13 இஸ்லாமிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த வருட மக்களவைத் தேர்தலில் இஸ்லாமியர், பிற சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகள் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு சென்றதால் காங்கிரஸ் தலைமையில் செயல்படும் அந்தக் கூட்டணி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 31 கைப்பற்றியது என்பது மாநில அரசியல் தலைவர்களின் கணிப்பு. இதைத்தான் பாஜக "வாக்கு ஜிகாத்" என விமர்சித்து வருகிறது. இஸ்லாமிய சமுதாயத்தின் வாக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்லாது எனவும் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளுக்கே கிட்டும் எனவும் பேசப்படும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அஜித் பவார் நவாப் மலிக் உள்ளிட்ட இஸ்லாமிய சமுதாய பிரதிநிதிகளை களமிறக்கியுள்ளது சுவாரசியமான போட்டியை உண்டாக்கியுள்ளது.