மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் பெரும்பான்மை கொண்டு ஆட்சி அமைக்க 145 தொகுதிகள் தேவை. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளிலும், மீதமுள்ள 38 தொகுதிகளில் பிற கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன. மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 152 இடங்களிலும், சிவசேனா 124 இடங்களிலும் போட்டியிட்டன. இதர கூட்டணி கட்சிகளுக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டது.
அதில் பாஜக 105 தொகுதிகளையும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதன் மூலம் பெரும்பான்மைக்கு தேவையான 145 இடங்களை விட கூடுதலாக 17 தொகுதிகளை பெற்று மொத்தமாக 162 இடங்களை பாஜக - சிவசேனா கூட்டணி கைப்பற்றியது. மறுமுனையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களையும் காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றியது. அனைவரும் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் முதல்வர் பதவிக்கான அதிகாரப் போட்டியில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது.
பாஜக ஆட்சி அமைக்க சிவசேனாவின் 56 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியும், 50 சதவிகிதம் அமைச்சர் பதவியும் தரவேண்டும் என சிவசேனா உறுதியாக இருந்தது. இந்த கோரிக்கைகளை நிராகரித்த பாரதிய ஜனதா, தேவேந்திர ஃபட்னாவிஸ் அடுத்த ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிப்பார் என்றே கூறி வந்தது.
உடன்பாடு ஏற்படாததன் காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்) 9 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவிற்கு ஆதரவளித்ததால், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆளுநரின் செயல்பாடுகளும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் இந்த கூட்டணி 3 நாட்களுக்கு மட்டுமே ஆட்சியில் இருந்தது.
பெரும்பான்மை நிரூபிக்க முடியாததைப் பற்றி பேசிய பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், “சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தினர். சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் மூன்றும் வெவ்வேறு கொள்கைகளை கொண்ட கட்சிகள். அந்த நேரத்தில் அஜித் பவார் எங்களுக்கு உதவுவதாக கூறினார். அஜித் பவார் தான் என்சிபியின் (தேசியவாத காங்கிரஸின்) சட்டமன்ற குழுத் தலைவர். அதனால், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் அஜித் பவாரிடம் இருப்பதாக நினைத்தோம். அவருடன் பேசிய பிறகு நாங்கள் ஆட்சி அமைத்தோம்.
எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கூட்டணியில் இதற்குமேல் தொடர விருப்பமில்லை என்று அஜித் பவார் என்னிடம் சொன்னார். அவர் ராஜினாமா செய்த பிறகு எங்களிடம் ஆட்சியமைக்க போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லை. ஆகவே நான் ராஜினாமா செய்ய உள்ளேன்” என கூறியிருந்தார்.
இதனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மீண்டும் இணைந்தன. தொடர்ந்து ‘மகாவிகாஷ் அகாடி’ எனும் கூட்டணியை அமைத்தது இக்கட்சிகள். முதலமைச்சராக உத்தவ் தாக்கரே கூட்டணிக் கட்சியினரால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேவுக்கு (சிவசேனா) முதல்வர் பதவியும், 15 பேருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதலமைச்சர் பதவியும், மேலும் 13 பேருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பேரவையின் சபாநாயகர் பொறுப்புக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் நியமிக்கப்படுவார் என்றும் அக்கட்சியைச் சேர்ந்த 13 பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. முடிவு செய்யப்பட்ட படி சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா பட்டோலே தேர்வு செய்யப்பட்டார்.
அஜித்பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் சரத்பவார் துணையால் துணை முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார். நவம்பர் 23 அன்று பாஜக உடன் இணைந்து துணை முதலமைச்சராக பதவி ஏற்ற அஜித்பவார் நவம்பர் 28 அன்று மகாவிகாஷ் அகாடி கூட்டணியிலும் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்த கூட்டணி கவிழும் வரை துணை முதலமைச்சராக அஜித்பவார் செயல்பட்டார்.
இது ஒரு புறம் இருக்க கடந்த ஆண்டு மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் இருந்த சிவசேனாவில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் சிவசேனா பிளவு பட்டது. வெறும் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்திற்கும் குறைவான அமைச்சர்கள் கொண்டு ஆட்சி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிவசேனாவின் தலைவரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே போராடி தோல்வி அடைந்தார். ஆட்சியும் கவிழ்ந்தது.
பெரும்பான்மையை நிரூபிக்க 143 உறுப்பினர்களின் ஆதரவை ஒரு கட்சி பெற்றிருக்க வேண்டும். அப்போது சிவசேனாவுக்கு 55, தேசியவாத காங்கிரஸுக்கு 52, காங்கிரஸுக்கு 44 எம்.எல்.ஏ.க்கள் என்றே இருந்தனர் (அந்த சமயத்தில் சிவசேனா எம்.எல்.ஏ ஒருவர் மரணமடைந்து விட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் சிறையில் இருந்தனர்). அதாவது 151 ஆதரவு இருந்தது. இதிலும் சிவசேனாவில் இருந்து 39 எம்.எல்.ஏ.க்கள் விலகிவிடவே, அதன் பலம் 112 ஆக குறைந்தது. இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
12 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 105 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஆதரவளிக்க, கடந்த ஆண்டு ஜுன் 30 ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்றார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தனக்கு பிறகு கட்சியில் செயல்பட தனது மகன் ஆதித்ய தாக்கரேவை முன் மொழிந்தார். அவரை சுற்றுச்சூழல் அமைச்சராகவும் ஆக்கினார். இவை அனைத்தும் சிவசேனா பிளவுறுவதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது. கட்சி பிளவுற்ற போது ஏக்நாத் ஷிண்டேவை கடுமையாக உத்தவ் தாக்கரேவும், அவரது மகன் ஆதித்ய தாக்கரேவும் விமர்சித்தனர். அப்போது அது குறித்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, ’ஆதித்ய தாக்கரே பிறப்பதற்கு முன்பே கட்சியின் கொடியை சுமந்து கட்சியை கட்டியவர்கள் நாங்கள். சிவசேனா பால்தாக்கரே குடும்பத்தின் சொத்தல்ல. நாங்கள் தான் உண்மையான வாரிசுகள்’ என்று கூறியிருந்தார். அதே சமயத்தில் 'எங்களைத் தான் உண்மையான சிவசேனா என அறிவிக்க வேண்டும்' என ஏக்நாத் ஷிண்டே தரப்பு தலைமை தேர்தல் ஆணையத்தையும் நாடியது. அதன் பின்னர், ஏக்நாத் ஷிண்டே தான் உண்மையான சிவசேனா எனவும் கட்சியின் வில் அம்பு சின்னம் அவர்களுக்கே சொந்தமானது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் பின் கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசமானது.
ஆட்சி கவிழ்ந்ததால் தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்ட்ரத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்தது. கட்சியில் சரத்பவாருக்கு அடுத்த நிலையில் இருந்த அஜித்பவார் எதிர்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு வந்ததார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சரத்பவார், பாஜகவை முழுமூச்சுடன் எதிர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரசியல் விமர்சகர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டது. மேலும் அவர் எப்போது வேண்டுமானாலும் பாஜக வசம் செல்லலாம் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
அண்மையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சரத்பவாரின் அறிவிப்பு மகாராஷ்ட்ர அரசியல் களத்தில் பெரும் பேசு பொருளானது. அவரது முடிவை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் அறிவுறுத்திய நிலையில் சரத்பவார் தனது அறிவிப்பை திரும்பப் பெற்று தலைமை பொறுப்பில் தொடருவதாக தெரிவித்தார்.
அடுத்த வருட மக்களவைத் தேர்தல் மற்றும் அடுத்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, தற்போதைய எதிர்க்கட்சிகளுடன் மகா விகாஸ் அகாடி கூட்டணியிலேயே தொடரும் என்று தெரிவித்த சரத்பவார் தனது மகளான சுப்ரியா சுலேவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழுவுக்கு தலைவராக நியமித்தார். இது அஜித்பவாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் பாட்னாவில் நடந்த எதிர்கட்சி தலைவர்களின் கூட்டத்திலும் சரத்பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே கலந்து கொண்டதும் அஜித்பவாருக்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று சிவசேனா பாஜக கூட்டணிக்கு 30 எம்.எல்.ஏக்களுடன் சென்று அஜித்பவார் தனது ஆதரவை தெரிவித்ததாக தகவல் வெளியானது. அத்துடன் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சென்ற 8 எம்.எல்.ஏ.க்கள் மாநில அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 63 வயதாகும் அஜித் பவார் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆவது முறையாக மகாராஷ்ட்ர மாநிலத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க கட்சியில் உள்ள அத்தனை எம்.எல்.ஏக்களின் ஆதரவும் தனக்கு இருப்பதாக அஜித் பவார் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அஜித் பவாருக்கு ஆதரவாக 13 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளதாக சரத்பவார் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக மத்தியபிரதேசத்தில் உள்ள போபாலில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல், மகாராஷ்டிரா நீர்ப்பாசன ஊழல் மற்றும் சட்டவிரோத சுரங்க ஊழல் உட்பட கிட்டத்தட்ட ₹70,000 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பட்டியல் மிக நீளமானது. இந்தக் கட்சிகளின் (எதிர்க்கட்சியில்) ஊழல் மீட்டர் ஒருபோதும் குறையாது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதே எதிர்க்கட்சிகளின் வேலைத்திட்டம்” என்று கூறியிருந்தார். அவர் அதை சொன்ன மறுதினமே தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரும் அஜித் பவார் தலைமையில், பாஜக-வுடன் இணைந்தனர். அஜித்பவார் - பாஜக கூட்டணியின் இந்த இணைப்பு, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளாலும் அரசியல் நோக்கர்களாலும் கடுமையாக தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பாஜக கூட்டணியில் இணைந்தது குறித்தும் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றது குறித்தும் விளக்குவதற்காக அஜித்பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளேன். கட்சியின் எம்.எல்.ஏக்கள் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. கட்சியின் சின்னத்திலேயே நாங்கள் போட்டியிடுவோம்” என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் இருந்தது குறிப்பிடத்தகுந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இது குறித்து கூறும் போது, “சிறந்த நிர்வாகிக்கு இரண்டாம் நிலை அங்கீகாரம் கிடைத்தால் இது போன்று நிகழ்வது இயல்பு. மாநிலத்தில் செயல்பட்டுவந்த இரட்டை என்ஜின் தற்போது 3 என்ஜின்களாக மாறியுள்ளது. வளர்ச்சியில் வேகமாக செல்லும் மாநிலம் ஒரு முதல்வரையும் இரண்டு துணை முதலமைச்சரையும் பெற்றுள்ளதால் மேலும் விரைவாக செல்லும்” என தெரிவித்தார்.
அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்தது குறித்து பேசியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ”இது போன்ற நிகழ்வுகள் எனக்கு புதிதல்ல. கட்சியின் விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியை விட்டுச் சென்றவர்கள் குறித்து கவலைப்படவில்லை. அவர்களின் எதிர்காலம் குறித்தே வருந்துகிறேன். கட்சியின் பெயரை பயன்படுத்துவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க போவதில்லை. மக்களிடையே செல்ல இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். சிவசேனா (உத்தவ் தாக்கரே) உடனான கூட்டணி தொடரும் என்று கூறியுள்ள அவர் தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்றினைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சரத்பவாரின் அண்ணன் ஆனந்த் பவாரின் மகன் தான் அஜித் பவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.