இந்தியா

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற படகு கவிழ்ந்து, 9 பேர் உயிரிழப்பு

webteam

மகாராஷ்ட்ராவில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற படகு கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேரை காணவில்லை.

வட மாநிலங்களில் கடும் மழை பெய்துவருகிறது. இந்த மழைக்கு குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநிலங்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளாவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப் பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள பாலுஸ் அருகேயுள்ள பிரமானல் கிராமத்தில் இன்று மீட்பு பணி நடந்தது. இந்த கிராமம் கிருஷ்ணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, ஊர் பஞ்சாயத்துக்கு சொந்தமான படகு சென்று வந்தது. முதலில் இரண்டு முறை சென்று ஆட்களை மீட்டு வந்த படகு, மூன் றாவது முறையாகச் சென்றது. 

வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிடும் என்ற பீதியின் காரணமாக படகில், ஏராளமானோர் ஏறினர். 20 பேர் செல்லக்கூடிய படகில், 30-க்கும் அதிகமானோர் ஏறியதால் திடீரென்று கவிழ்ந்தது. இதில், 7 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேரை காணவில்லை. மற்றவர்கள் நீந்தி கரையேறினர்.

இதையடுத்து மீட்பு படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் 20 படகுகளில், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மழை காரணமாக, மேற்கு மகாராஷ்ட்ராவில் நேற்று 16 பேர் உயிரிழந்த நிலையில் இந்த படகு விபத்து சம்பவம், அந்தப் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.