பிரதமர் மோடி, பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே pt web
இந்தியா

மகாராஷ்டிரா தேர்தல்| பால் தாக்கரேவை உயர்த்திப் பிடிக்கும் மோடி.. பலன் கொடுக்குமா பரப்புரை வியூகம்?

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் சிவசேனை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவை உயர்த்திப் பிடிக்கும் காரணம் என்ன?

Angeshwar G

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தனது முதல் பரப்புரையை நேற்று மேற்கொண்டார். துலே பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், ஜாதி, இனம் ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலை காங்கிரஸ் மேற்கொள்கிறது. ஒரு சமூகத்திற்கு எதிராக மற்றொரு சமூகத்தினை நிற்கச் செய்து மக்களை பலவீனமாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது” என குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சியினரின் மகாவிகாஸ் அகாடி சக்கரமில்லாத வாகனம் என சாடிய அவர், அந்த வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர கூட்டணிக் கட்சியினரிடையே சண்டை நடந்து வருவதாகவும் சாடினார்.

நாசிக்கில் நடந்த மற்றொரு கூட்டத்தில் பேசிய அவர், சிவசேனை நிறுவனரான பால் தாக்கரே நாட்டுக்காக ஆற்றிய பங்களிப்புகள் ஈடு இணையற்றவை. சவார்க்கரையோ அல்லது பால் தாக்கரேவையோ மதிக்காத காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ் தாக்கரேவின் கட்சி எப்படி இணைய முடியும். இதுவரை காங்கிரஸ் தலைவர்களின் வார்த்தைகளில் இருந்து பால் தாக்கரேவைப் புகழ்ந்து ஒரு வார்த்தை கூட வந்ததில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

எங்கு பார்த்தாலும் பால்தாக்கரே புகைப்படங்கள்

மற்றொரு பாஜக தலைவர் நாராயண் ராணே, உத்தவ் தாக்கரே இந்துத்துவாவை தியாகம் செய்துதான் முதல்வர் ஆனதாக கடுமையாக விமர்சித்தார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் பேசியிருந்த உத்தவ் தாக்கரே, “இன்று நீங்கள் மகாராஷ்ட்ராவில் எங்கு சென்றாலும், கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது சுவரொட்டிகளில் பால் தாக்கரேவின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். பாஜக போஸ்டர்களின் புகைப்படங்களில் பிரதமர் மோடி அல்லது அமித்ஷாவின் புகைப்படங்கள் இருக்காது. ஏனெனில் அவர்களின் புகைப்படம் தோல்விக்கான உத்தரவாதம்... தோல்விக்கான உத்தரவாதம் என்பது மோடி மற்றும் அமித்ஷாவின் வாக்குறுதிகள்” என தெரிவித்தார்.

ஏன் பால் தாக்கரே பேசப்படுகிறார்?

மராத்தியர்கள் மண்ணின் மைந்தர்கள், அவர்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை என்ற கோஷத்தையும் இந்துத்துவத்தையும் முன்வைத்து சிவசேனை எனும் கட்சியைத் தொடங்கினார் பால் தாக்கரே. இன்று வரையிலும் மண்ணின் மைந்தர்கள் எனும் மராட்டி மானோஸ் எனும் கோஷம் மும்பையின் பல பகுதிகளிலும் ஒலிக்கிறது. அவர் 1960 ஆம் ஆண்டில் தொடங்கிய மர்மிக் என்ற இதழில் மும்பையில் உள்ள தென்னிந்தியர்கள் அதாவது தமிழர்களைக் குறிவைத்தே கேலிச்சித்திரங்களை வெளியிட்டு வந்தார்.

அதாவது, மராத்தியர்களின் வேலைகளை வெளிமாநிலத்தவர்கள் பறிக்கிறார்கள். நீங்கள் வேடிக்கை பார்க்கின்றீர்கள் என்ற பொருளில்தான் கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்டன. அவரது சிவசேனை கட்சிக்கு முக்கிய ஆதரவாக இருந்தவர்கள் மும்பையில் உள்ள நடுத்தர வர்க்க மக்கள். பிராந்திய கொள்கை, இந்துத்துவம், இனவாதம் மூன்றும் அடிப்படைக் கொள்கைகள். போதாதா., தொடர்ச்சியான வளர்ச்சிதான். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பாஜக உடனான கூட்டணி. மாநிலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தது சிவசேனை.

மும்பை மாநகராட்சி சிவசேனை மாநகராட்சியின் கோட்டை

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட மும்பை மாநகரில், தெற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, தெற்கு மத்திய மும்பை என மூன்று தொகுதிகளில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையே வெற்றி பெற்றிருந்தது. மேலும் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கும் மும்பையிலும் மும்பை பெருநகரப் பகுதிகளிலும் செல்வாக்கு அதிகம். அதாவது, மகாராஷ்டிர மாநிலத்தை ஆள்வது யாராக இருந்தாலும், மும்பை மாநகராட்சி என்பது சிவசேனையின் கோட்டையாகவே கருதப்படுகிறது.

எனவே, பால் தாக்கரேவிற்காக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையை ஆதரிப்பவர்களை, ஷிண்டே அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணிக்கு திசை திருப்பவே, முன்னெப்போதையும் விட பால் தாக்கரேவை பாஜக உயர்த்திப் பிடிக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதாவது, இந்துத்துவாவிற்காக சிவசேனையை ஆதரித்தவர்கள் பாஜக பக்கம் செல்லலாம் என்றும், பிராந்திய நலனுக்காக சிவசேனையை ஆதரித்தவர்கள் உத்தவ் தாக்கரே பக்கம் நிற்கின்றனர் என்றும் கொள்ளலாம்.

உத்தவ் தாக்கரே

கடந்த மக்களவைத் தேர்தலில் கூட உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்களாக இருந்தாலும், அவர்கள் பிரதமராக மோடி வருவதையே விரும்புகின்றனர் என்ற ஊகங்கள் இருந்தன. தற்போது சட்டமன்ற தேர்தல் என்பதால் உத்தவ் தாக்கரே கை சற்றே ஓங்கியுள்ளதாக தெரிகிறது.