மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஒரேகட்டமாக 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ.23) நடைபெற்று வருகிறது. அதன்படி, பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. தற்போது வரை அக்கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தக் கூட்டணியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியன உள்ளன.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 149 இடங்களில் பாஜக போட்டியிட்ட நிலையில், தற்போது வரை 120 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேநேரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 இடங்களில் போட்டியிட்ட நிலையில், 56 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், இந்த முறை பாஜக சார்பிலேயே முதல்வர் அறிவிக்கப்படுவார் என அங்குள்ள வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.
அந்த வகையில் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு அடுத்த முதல்வராக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவே மீண்டும் முதல்வராகப்படலாம் என அவரது சிவசேனா நம்புகிறது. அக்கட்சியின் தலைவர் நரேஷ் மஸ்கே, “ஏக்நாத் ஷிண்டேதான் முதல்வராக வேண்டும்” என தற்போதே கோரிக்கை வைத்துள்ளார். “சிவசேனாவை வழிநடத்தும் திறன் கொண்டவர் ஏக்நாத் ஷிண்டேதான் என மக்கள் கூறியுள்ளனர். அதனால் அவர்தான் முதல்வராக வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அது இந்த முறை நடக்காது என்பதுதான் பலருடைய கருத்துக்கணிப்பாக உள்ளது.
கடந்த 2019 தேர்தலில் பாஜகவும், ஒன்றினைந்த சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டன. அப்போது பாஜக 105 இடங்களிலும், பிரிக்கப்படாத சிவசேனா 56 இடங்களிலும் வென்றிருந்தன. அப்போது முதல்வர் பதவியை எதிர்பார்த்த உத்தவ் தாக்கரேவுக்கு பாஜக மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வரானார். அஜித் பவார் துணை முதல்வரானார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மூன்று நாட்களில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், சரத் பவார் கட்சி, சிவசேனா ஆகியன மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்தன. அதன்படி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.
ஆனால், இரண்டரை ஆண்டு சிறப்பாய்ப் போய்க் கொண்டிருந்த இந்த ஆட்சியில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, 39 எம்எல்ஏக்களுடன் வெளியேறினார். இதனால் சிவசேனா இரண்டாக உடைந்தது. மேலும், ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் இணைந்து அக்கட்சி ஆதரவுடன் முதல்வரானார். பாஜகவின் ஃபட்னாவிஸ் துணை முதல்வரானார். அந்த நேரத்தில், பாஜகவுக்கு அதிக எம்.எல்.ஏக்கள் இருந்தபோதும், ஆட்சியைத் தக்கவைப்பதற்காக, குறைந்த எம்.எல்.ஏக்கள் இருந்த ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு விட்டுக் கொடுத்தது. இதன்மூலம் பாஜக, மகாராஷ்டிராவில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டது. தவிர சிவசேனாவின் வாக்குகளைச் சேகரிக்க முடிந்தது. அதன்பயனாகத்தான் தற்போது மராட்டிய மண்ணில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதனால், இந்த முறை பாஜகவைச் சேர்ந்தவரே முதல்ராக்கப்படலாம் என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. எனினும், பாஜக ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால், அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கட்டாயம் வேண்டும். ஒருவேளை, கடந்த காலத்தில் உத்தவ் தாக்கரே போர்க்கொடி தூக்கியதுபோல், ஏக்நாத் ஷிண்டேவும் இந்த முறை போர்க்கொடி தூக்க வாய்ப்பிருந்தால் துணை முதல்வர் அஜித் பவார் கட்சி ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும். காரணம், அஜித் பவாரின் கட்சியும் அதே கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறது. அவருடைய கட்சியும் 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆக, இவ்விரு கட்சிகளும் ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மைக்கு அதிகமாகவே உள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.