இந்தியா

கொரோனாவால் விழிபிதுங்கும் மகாராஷ்டிரா: மீண்டும் முழு ஊரடங்கா? முதலமைச்சர் விளக்கம்

கொரோனாவால் விழிபிதுங்கும் மகாராஷ்டிரா: மீண்டும் முழு ஊரடங்கா? முதலமைச்சர் விளக்கம்

webteam

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தான் கடுமையான பாதிப்பில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா அம்மாநிலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட தகவலின்படி, நேற்று ஒரே நாளில் 3493 கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. மாநில அளவில் மொத்தமாக 1,01,141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,717 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 47,796 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவு 3,607 பேருக்கு தொற்று உறுதியானது. மும்பை பகுதியில் மட்டும் 55ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 2044 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரேநாளில் 90 பேர் கொரோனாவுக்கு மும்பை பகுதியில் மட்டும் உயிரிழந்துள்ளனர். இந்த இக்காட்டான நிலையில் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு மீண்டும் அமலாக உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மகாராஷ்டிர முதலமைச்சர், சில தொலைக்காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் மகாராஷ்டிராவில் மீண்டும் முழு ஊரடங்கு என செய்திகள் வெளியாகுகின்றன. ஆனால் அப்படி எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் என்பது பொருளாதாரத்தை சீர்படுத்த மட்டுமே, இதனைப் பயன்படுத்தி கூட்டம் கூடுவதோ தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதோ தவறு எனத் தெரிவித்துள்ளார்.