இந்தியா

மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம்.. காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா பேச்சுவார்த்தை..?

webteam

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடம் சிவசேனா கட்சி பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ஆம் தேதி வெளியானது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிப் பெற்றது. காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி 104 இடங்களில் வெற்றிப் பெற்றது. பாஜக-சிவசேனா கட்சிகள் கூட்டணியாக தேர்தலில் போட்டியிட்டது. இந்தக் கூட்டணி பெரும்பான்மையை பெற்று இருந்தாலும் இரு கட்சிகளிடையே நிலவி வரும் சிக்கலால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சிவசேனா கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சியமைப்பது குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் இந்தப் பேச்சுவார்த்தை நடத்திருக்க கூடும் எனக் கருதப்படுகிறது. 

முன்னதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்தித்திருந்தார். அப்போது இருவரும் மகாராஷ்டிராவில் இருக்கும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசித்ததாக தெரிவித்தனர். இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியுடனும் சிவசேனா பேசியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் மிகவும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.