இந்தியா

‘நூறு நாட்கள் நிறைவு செய்ததும் ராமர் கோயிலுக்கு செல்கிறார் உத்தவ் தாக்கரே’ - சஞ்சய் ராவத்

‘நூறு நாட்கள் நிறைவு செய்ததும் ராமர் கோயிலுக்கு செல்கிறார் உத்தவ் தாக்கரே’ - சஞ்சய் ராவத்

webteam

100 நாள் ஆட்சியை நிறைவு செய்ததும் ராமர் கோயிலுக்கு சென்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே வழிபாடு செய்ய உள்ளதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து சிவசேனா கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆகவே ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. சிவசேனா கட்சி முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது எனக் கூறியதால் பாஜக- சிவசேனா இடையே பூசல் மூண்டது. ஆகவே கூட்டணியை விட்டு சிவசேனா வெளியேறியது.

இதனிடையே அஜித் பவார் உதவியுடன் திடீரென்று பாஜக ஆட்சியை அமைத்தது. நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க சொன்னதால் தேவேந்திர பட்னாவிஸ் பதவியை ராஜிநாமா செய்தார். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சியை அமைத்தது. முறைப்படி கடந்த 2019 ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல்வராக உத்தவ் தாக்ரே பதிவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், 100 நாள் ஆட்சியை நிறைவு செய்ததும் ராமர் கோயிலுக்கு சென்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே வழிபாடு செய்ய உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

“இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ராமர் ஆசீர்வாதத்துடன் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும். எங்களது ஆட்சி 100 நாட்கள் நிறைவடைந்ததும், தாக்கரே அயோத்திக்கு சென்று ராமர் லல்லாவில் வழிபாடு செய்ய உள்ளார். அதன்பின் அவர் எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்று பட்டியலிடுவார்” என ரவுத் ட்வீட் செய்துள்ளார்.

உத்தவ் தாக்கரே கடைசியாக 2019 ஜூன் மாதம் அயோத்திக்குச் சென்றார். ராம் லல்லா கோயிலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனது கட்சியைச் சேர்ந்த 18 எம்.பி.க்களுடன் அவர் பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.