ஏக்நாத் ஷிண்டே எக்ஸ் தளம்
இந்தியா

ரூ.6,000 டு ரூ.10,000 வரை.. படித்த இளைஞர்களுக்கும் உதவித்தொகை.. களத்தில் குதித்த மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிராவில் படித்த இளைஞர்களுக்காகவும் 'லாட்லா பாய் யோஜனா' (Ladla Bhai Yojana) என்னும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில்தான் அஜித் பவாரின் கட்சியும் உள்ளது. இதற்கு நேர் எதிரே உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் கட்சி ஆகியன ’மகா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துச் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளது. இந்தச் சூழலில் முக்கியத் தலைவர்களின் கட்சித் தாவல் அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அரசு, அம்மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அம்மாநிலத்தில் படிக்கும் பெண்கள் மற்றும் மகளிருக்கு பல உதவித்தொகை சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் மகளிர் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதுபோலவே மகாராஷ்டிரா மாநிலத்திலும் தற்போது மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்காகவும் 'லாட்லா பாய் யோஜனா' (Ladla Bhai Yojana) என்னும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: பிராங்கால் ஏற்பட்ட விபரீத விளைவு.. மும்பை கட்டடத்தின் 3வது மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு!

இந்த புதிய திட்டத்தின்கீழ் மகாராஷ்டிரா மாநில இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவிலான நிதியுதவி கிடைக்க இருக்கிறது. Ladla Bhai Yojana திட்டத்தின்கீழ், இளைஞர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் பல்வேறு நிதிச் சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது.

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.6,000மும், டிப்ளமோ முடிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.8,000மும், பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.10,000மும் அரசு நிதியுதவி வழங்க இருக்கிறது. மேலும் இத்திட்டத்தின்கீழ், இளைஞர்கள் தொழிற்சாலை ஒன்றில் ஓராண்டு பயிற்சி பெறுவார்கள். அந்த அனுபவத்தின் அடிப்படையில் வெளியில் பிற வேலைகளை பெறக்கூடிய அளவுக்கு அனுபவத்தைப் பெறுவார்கள். இந்த முயற்சியின்மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் திறமையான பணியாளர்களைத் தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும், ’நான் முதல்வன் திட்ட’த்தை நினைவுபடுத்துவதாக உள்ளது என்றாலும், இதைக் கொண்டு மாணவர்கள் தங்கள் அடுத்தகட்ட உயர்படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான தயாரிப்புகளில் ஈடுபட முடியும்.

2024-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதால் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற முக்கிய பொருளாதார மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவரும்வேளையில், இந்தப் பிரச்னையைச் சரிசெய்யவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: திருமணமாகி 1 வருடம் ஆன நிலையில், கணவரை விவாகரத்து செய்தார் துபாய் இளவரசி.. இன்ஸ்டாவில் பதிவு!