சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவோம் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் 21 ஆம் தேதி வாக்குப்பதிவும், 24ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்தல் அறிக்கையை பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும், மகாராஷ்டிரா மாநிலத்தை வறட்சியிலிருந்து காக்கும் நடவடிக்கையும் எடுக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே மற்றும் சாவர்க்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்க வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவர்க்கர் நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களுள் ஒருவராவர். அத்துடன் இவர் இந்துத்துவா கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.