ராகுல் நார்வேகர், பராக் ஷா, தேவேந்திர ஃபட்னாவிஸ் pt web
இந்தியா

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் | கோடீஸ்வர வேட்பாளர்களில் அதிகமானோர் பாஜகவினர்.. ஆச்சர்யமூட்டும் தகவல்

பல தசாப்தங்களாக தொழில் துறை முதலீடுகள் மற்றும் அந்நிய முதலீடுகளில் முன்னணியில் உள்ள மகாராஷ்டிராவில், சட்டசபை தேர்தல் களத்தில் மிகப்பெரிய செல்வந்தர்கள் பலர் உள்ளனர்.

கணபதி சுப்ரமணியம்

முதலிரு இடங்களில் பாஜக

பல தசாப்தங்களாக தொழில் துறை முதலீடுகள் மற்றும் அந்நிய முதலீடுகளில் முன்னணியில் உள்ள மகாராஷ்டிராவில், சட்டசபை தேர்தல் களத்தில் மிகப்பெரிய செல்வந்தர்கள் பலர் உள்ளனர். அந்தப் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் பாரதிய ஜனதா கட்சியின் பராக் ஷா.

கிழக்கு காட்கோப்பர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பராக் ஷா தனது சொத்து மதிப்பு ரூ. 3,382 கோடி ரூபாய் என தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் இவர் இதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த போது தனது சொத்து மதிப்பு 500 கோடி ரூபாய் என தெரிவித்திருந்தார். ரியல் எஸ்டேட் அதிபரான 55 வயதான பராக் ஷா குடும்பத்தின் சொத்து மதிப்பு ஐந்து வருடங்களில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தில் உள்ளவர் பாரதிய ஜனதா கட்சியின் மலபார் ஹில் தொகுதி வேட்பாளரான மங்கல் பர்பத் லோடா. தனக்கு 447 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்திருக்கும் இவர் 2019 ஆம் வருடத்தில் தனக்கு 441 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். மங்கல் பர்பத் லோடா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின்படி இவரது சொத்து மதிப்பு 1.2% மட்டுமே அதிகரித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் சிவசேனா

மூன்றாவது இடத்தில் உள்ள உள்ளவர் சிவ சேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவை சேர்ந்த பிரதாப் சார்நிக். ஒவாலா மாஜிவாடா தொகுதியில் போட்டியிடும் இவர் தனது சொத்து மதிப்பு 333 கோடி என தெரிவித்துள்ளார்.

இதற்கு அடுத்த இடத்தில் உள்ளவர் பாரதிய ஜனதா கட்சி கொலாபா தொகுதி வேட்பாளரான ராகுல் நார்வேகர் தனது சொத்து மதிப்பு 129 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். நார்வேகர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் சபாநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா சேனா உத்தவ் தாக்கரே பிரிவை சேர்ந்த சுபாஷ் போயிர் தனது சொத்து மதிப்பு 95 கோடி என தெரிவித்துள்ளார். கல்யாண் தொகுதியில் போட்டியிடும் இவர் தனது பிரமாண பத்திரத்தில் இந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.

பட்டியலில் இன்னும் யார், யார்?

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவு சார்பாக போட்டியிடும் ஜிதேந்திர அவ்கத் தனது சொத்து மதிப்பு 83 கோடி என தெரிவித்துள்ளார். முன்பு அமைச்சராக இருந்த ஜிதேந்திர அவ்கத் மும்பிரா-கல்வா தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பிரிவு சார்பாக போட்டியிடும் நஜீப் முல்லா தனது சொத்து மதிப்பு 76 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். ஆகவே மும்பிரா-கல்வா தொகுதியில் இரண்டு செல்வந்தர்கள் மோதிக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் ஆஷிஷ் ஷிலர் தனது சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். இவர் மேற்கு பாந்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் தனது சொத்து மதிப்பு 13 கோடி ரூபாய் என பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தென்மேற்கு நாக்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இவர் தற்போது துணை முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்ய தாக்கரேக்கு 23 கோடி ரூபாய் மதிப்பு

மகாயூதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி வேட்பாளர்களை தவிர பிறருக்கும் செல்வத்துக்கும் குறைவில்லை என்பதை காட்டும் விதமாக மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சியின் ராஜு பாட்டில் தனது சொத்து மதிப்பு 24 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். கல்யாண் தொகுதியில் போட்டியிடும் இவர் தனது பிரமாண பத்திரத்தில் இந்த விவரத்தை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மற்றும் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தனது சொத்து மதிப்பு 23 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். ஒர்லி தொகுதியில் போட்டியிடும் இவர், பாலாசாஹேப் தாக்கரேயின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் நீண்ட காலமாக இடம் பிடித்திருக்கும் முகேஷ் அம்பானி வசிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு பெரிய நிறுவனங்கள் தங்களுடைய தலைமை அலுவலகத்தை மும்பையில் அமைத்துள்ளன.

பங்குச்சந்தை மற்றும் ரிசர்வ் வங்கி அலுவலகம் ஆகியவை மும்பையில் அமைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தொழில்துறையில் மட்டுமல்லாது வேளாண் துறையிலும் முன்னணியில் உள்ளது. வெங்காயம், கரும்பு, பருத்தி, பூண்டு, சோயாபீன், ஆரஞ்சு பழம், திராட்சை மற்றும் மாதுளை போன்ற பயிர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் ரியல் எஸ்டேட் தொழிலைப் பொறுத்தவரை, மும்பையில் நிலம் மற்றும் வீடுகளின் விலை நாட்டிலேயே உச்சபட்ச அளவில் உள்ளது. இப்படி பொங்கும் செல்வம் கொண்ட மகாராஷ்டிராவில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் பெரும் செல்வந்தரகளாக திகழ்கின்றனர்.