ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா|மக்கள் மன்றத்திலும் கோட்டைவிட்ட உத்தவ் தாக்கரே..சரிந்த வாக்கு சதவிகிதம்! இனி ஷிண்டேதான்!

”இனி ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸின் கீழ் பணிபுரிய வேண்டும்” என முன்னாள் முதல்வரும் சிவசேனா பிரிவு தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Prakash J

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஒரேகட்டமாக 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. தற்போது வரை அக்கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தக் கூட்டணியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியன உள்ளன. இதனால், பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. என்றாலும், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போதே தொடங்கிவிட்டது.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

இதுகுறித்து, முன்னாள் முதல்வரும் மற்றொரு சிவசேனா பிரிவு தலைவருமான உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். அவர், ”இனி ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸின் கீழ் பணிபுரிய வேண்டும். மகாராஷ்டிர முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவை அவர் காலி செய்ய வேண்டும். இதனால், எந்த பங்களாவை நீங்கள் பெறப் போகீர்கள் என்பதை முதலில் கண்டுபிடிக்கவும்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர், விமர்சித்திருப்பதற்கு முக்கியக் காரணம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜகவைவிடக் குறைவான (81)இடங்களிலேயே போட்டியிட்டது. இதில் 56 இடங்களிலேயே முன்னிலையில் உள்ளது. ஆனால் அதன் கூட்டணிக் கட்சியான பாஜக 149 இடங்களில் போட்டியிட்டு, 120 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இதனால், அந்தக் கட்சியே அதிகாரப்பூர்மாக முதல்வர் பெயரை அறிவிக்கும் எனவும், அதன்படி, தற்போது துணை முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸே மீண்டும் முதல்வராகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை, ஏக்நாத் ஷிண்டே இந்த விஷயத்தில் பேரம் பேசவே வாய்ப்பில்லை. இதனால் அவர் பிரிந்து போனாலும் அதே கூட்டணியில் உள்ள அஜித் பவார் கட்சியை வைத்து பாஜக ஆட்சியமைக்கும். இதைவைத்தே, உத்தவ் தாக்கரே இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். இது, கடந்தகால அரசியலை நினைவுபடுத்தியுள்ளது. அதாவது, உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கலைத்துவிட்டு புதிய முதல்வராக ஆனவர் ஏக்நாத் ஷிண்டே. அதே நிலைமை தற்போது அவருக்கு உருவாகி உள்ளது.

Eknath Shinde - Uddhav Thackeray

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் உத்தவ் தாக்கரேவின் சிசேனா (யுபிடி) 89 இடங்களில் போட்டியிட்ட நிலையில், வெறும் 20 இடங்களிலேயே வெற்றிபெற்று உள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தலை ஒப்பிடும்போது, ​​இந்தக் கட்சிக்கு முடிவுகள் அதிர்ச்சியாக அமைந்துள்ளன. அந்தத் தேர்தலில், இந்தக் கட்சி 9 இடங்களையும், ஷிண்டேவின் கட்சி 7 இடங்களையும் பெற்றிருந்தன. ஆனால் அடுத்த ஐந்து மாதங்களில் உத்தவ் தாக்கரே கட்சியின் வாக்குச் சதவிகிதம் மேலும் சரிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குச் சதவிகிதத்தைக்கூட அக்கட்சி எட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், 'உண்மையான' சிவசேனா தாங்கள்தான் என நம்பிக்கொண்டிருந்த உத்தவ் தாக்கரேவுக்கு இந்தத் தேர்தல் பெருத்த அடியையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.