மகாராஷ்டிரா எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா| தவறான கருத்துக்கணிப்பா? ஹரியானாவைப்போல் மாற வாய்ப்பு? ஆய்வில் வெளியான புதிய தகவல்!

மகாராஷ்டிரா தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது

Prakash J

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக்காலம், நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஒரேகட்டமாக 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மகாராஷ்டிராவில் 66.05 வாக்குகள் பதிவாகி உள்ளன. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

எனினும், இந்தத் தேர்தலில் தொடக்கம் முதலே காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடிக்கும், பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. மஹாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 இடங்களிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 95 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.

இதையும் படிக்க: அதானிக்கு செக் வைத்த கென்யா.. 736 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து..!

இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் மகாராஷ்டிராவில் பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. அந்த வகையில் பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி 140க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தெரிவித்த கருத்துக்கணிப்புகள்போல் இந்த முறையும் தவறாக அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ட்விஸ்ட் இருக்கலாம்..!

முன்னதாக, ஹரியானாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் எனப் பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன. ஆனால், இறுதியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேபோல், இங்கேயும் (மகாராஷ்டிரா) மாறும் என ஆங்கில ஊடகம் (என்.டி.டி.வி.) ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மூன்று கருத்துக்கணிப்புகளில் இரு கூட்டணிகளுக்கும் பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்காது எனத் தெரிவித்திருப்பதாக அதன் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது இரண்டு கூட்டணிகளும் நெருக்கமான எண்ணிக்கையிலான இடங்களைப் பெறும் என்று கணித்துள்ளன. இதன்மூலம் தொங்கு சட்டசபை அமையலாம் என்றும், இதர கட்சிகள் கிங் மேக்கராக வரலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஒரேயொரு கருத்துக்கணிப்பு மட்டும் காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாடியை ஆதரித்துள்ளது என அது தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட்.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி! பின்னணி இதுதான்!