ரத்தன் டாடா கோப்புப்படம்
இந்தியா

“மக்களின் அன்பைப் பெற்ற மனிதநேய பண்பாளர் ரத்தன் டாடாவின் உடலுக்கு, அரசு மரியாதை!” - மகாராஷ்டிரா அரசு

PT WEB

தொழிலதிபர் ரத்தன் டாடா, வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த 7ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், தொடர்ந்து அவரது ரத்த அழுத்தம் குறைந்ததுடன், மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டதால் மாலை 7 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு, சிகிச்சைப் பலனின்றி ரத்தன் டாடா நேற்றிரவு 11.30 மணியளவில் காலமானார்.

இந்நிலையில், மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், “ஒழுக்கம் மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றின் கலவை ரத்தன் டாடா” என்று தெரிவித்துள்ளார்.

காலம் ரத்தன் டாடாவை ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறது. மறைந்தார் ரத்தன் டாடா

மேலும், “மும்பையில் உள்ள என்சிபிஏ மையத்தில் ரத்தன் டாடாவின் உடல், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரத்தன் டாடாவின் மறைவுக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என, அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலத்திற்கு, ரத்தன் டாடா உலகளாவிய அங்கீகாரம் வழங்கியதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரத்தன் டாடாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

"பெருநிறுவன வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியோடு இணைத்த ஒரு அடையாளத்தை, இந்தியா இழந்துவிட்டது”

பிரதமர் மோடி

”ரத்தன் டாடா தீர்க்கமான பார்வை கொண்ட தொழில் உலக தலைவர். மிகச்சிறந்த மனிதர். சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான உறுதியால், பலரின் அன்பை பெற்றவர்.”

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

“ரத்தன் டாடா மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு. இளைஞர்கள் அவரது பாதையை பின்பற்றுவார்கள்”

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

“ரத்தன் டாடா தீர்க்கமான பார்வை கொண்ட மனிதர். வணிகம் மற்றும் நன்கொடையில், அவர் தனது அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார்”

டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன்

“இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பிற்கு வடிவம் கொடுத்தவர் ரத்தன் டாடா.. ” என குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“இந்திய தொழில்துறையின் உண்மையான டைட்டன் மற்றும் பணிவு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர் ரத்தன் டாடா. அவரது தொலைநோக்கு தலைமை டாடா குழுமத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், நெறிமுறை வணிக நடைமுறைகளுக்கு உலகளாவிய அளவுகோலையும் அமைத்தது. தேசத்தைக் கட்டியெழுப்புதல், கண்டுபிடிப்புகள் மற்றும் இரக்கம் ஆகியவற்றில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு மில்லியன் கணக்கான உயிர்களின் மீது அழியாத தாக்கத்தை பதித்துள்ளது” என கூறியுள்ளார்.

மேலும், ரத்தன் டாடாவின் மறைவுக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கெளதம் அதானி, ஆனந்த் மகிந்திரா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்ட என பலர் தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.