மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா - ஒரே கட்டம், ஜார்க்கண்ட் - இரு கட்டம் | சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

Prakash J

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

நடப்பாண்டில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடைபெறும் என கடந்த ஆகஸ்ட் மாதம் சொல்லப்பட்டது. ஆனால், ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, தேர்தல் ஆணையம் ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீருக்கு மட்டும் சமீபத்தில் தேர்தலை நடத்தி முடித்துள்ளது. இதில் ஹரியானாவில் மீண்டும் பாஜகவும், ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றிபெற்றுள்ளன. இந்த நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் சரத் பவார் கட்சியில் இருந்து அஜித் பவார் கட்சியும் இணைந்துள்ளது. இந்த நிலையில், 288 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து இம்மாநிலத்திற்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று (அக்.15) அறிவித்துள்ளது. நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அது தெரிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 29ஆம் தேதியாகும். மனுவைத் திரும்பப் பெற நவம்பர் 1ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதையும் படிக்க; நோபல் பரிசு வென்றதை கொண்டாட மறுத்த தென்கொரிய எழுத்தாளர்! வருத்தமான பின்னணி! உண்மையை உடைத்த தந்தை!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

அதுபோல், ஜார்க்கண்ட்டில் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஹேமந்த் சோரன் கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தின் 81 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட 5 ஆண்டு பதவிக்காலம் 2025 ஜனவரி 5இல் முடிவடைகிறது. ஆக, இம்மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜார்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 என இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13-ஆம் தேதி 43 தொகுதிகளில் நடைபெறுகிறது. இரண்டாம்கட்டமாக 38 தொகுதிகளில் நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்திலும் நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நவம்பர் 13ஆம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் ரேபரேலி தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி ராஜினாமா செய்ததன் மூலம் காலியாக உள்ள வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். அவர், நடப்பாண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலுமே வெற்றிபெற்றார். இதில், ரேபரேலி தொகுதி எம்பியாக அவர் பதவியேற்றதை அடுத்து, வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையும் படிக்க: இஸ்ரேல்-காஸா போர் | 4 ராணுவ வீரர்களைக் கொன்ற ஹிஸ்புல்லா.. பதிலடியில் தரைப்படை தளபதி மரணம்