இந்தியா

பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது குஜராத், மகாராஷ்டிரா, அசாம்

பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது குஜராத், மகாராஷ்டிரா, அசாம்

rajakannan

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, மகாராஷ்டிரா, குஜராத், அசாம் அரசுகள் விலைக் குறைப்பு செய்துள்ளன. 

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், கலால் வரியில் ஒரு ரூபாய் 50 காசுகள் குறைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி இதனை தெரிவித்தார். எண்ணெய் நிறுவனங்களும் ஒரு ரூபாய் விலை குறைப்பு செய்ய ஒப்புக் கொண்டுள்ளதால், நாளை முதல் பெட்ரோல், டீசல் விலையில் ரூ2.50 குறைக்கப்படும் என கூறினார். அத்தோடு, மாநில அரசுகளும் ரூ2.50 குறைக்க வேண்டுமென மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் கோரிக்கையை ஏற்று மகாராஷ்டிரா, குஜராத், அசாம் அரசுகள் ரூ.2.50 குறைத்துள்ளன. மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால், மகாராஷ்டிரா, குஜராத், அசாம் மாநிலங்களில் நாளை முதல் பெட்ரோல், டீசல் விலையில் ரூ5 குறைக்கப்படும்.

முன்னதாக, மத்திய அரசு தனது கலால் வரியை குறைப்பதற்கு முன்பாக சில மாநில அரசுகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களது வாட் வரியை குறைத்தன. அதன்படி, முதன்முதலாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது கேரள அரசுதான். கேரள அரசு பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாய் மட்டும் குறைத்து இருந்தது. ஆந்திர அரசு பெட்ரோல், டீசல் விலையில் ரூ2 குறைத்தது. ராஜஸ்தான் அரசு 2 ரூபாய் 50 காசுகள் குறைத்தது.