நேற்று நடந்த புதிய நாடாளுமன்ற கட்டட தொடக்க விழாவில் பங்கேற்க காலை 7.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்ற பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றார். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடந்து நடைபெற்ற பூஜையில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். இதையடுத்து பூஜை செய்யப்பட்ட செங்கோலை பிரதமர் மோடியிடம் ஆதீனங்கள் வழங்கினர். செங்கோல் முன்பாக பிரதமர் நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்கினார். புதிய நாடாளுமன்றத்தில், மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை பிரதமர் நிறுவினார். பின்னர் ஆதீனங்களிடம் தலைவணங்கி பிரதமர் ஆசி பெற்றார்.
இதுகுறித்து மதுரை ஆதீனம் பேசுகையில், 'திருவாவடுதுறை ஆதீனம் மூலமாக செங்கோலுக்கு பூஜை செய்யப்பட்டது. கோளறு பதிகம் பதினொரு பதிகம் பாடி, பிரதமரிடம் செங்கோலை கொடுத்தோம். குத்துவிளக்கு பூஜைகள் செய்யப்பட்டு சபாநாயகர் இருக்கை அருகே அது நிறுவப்பட்டது. எங்களை அழைத்ததும், செங்கோலுக்கான பூஜைகள் செய்ததும் மகிழ்ச்சி
டாக்டர் அம்பேத்கரின் கனவுகளை நனவாக்கி வருகிறார் பிரதமர் மோடி. எங்களையெல்லாம் வரவழைத்து பெருமைப்படுத்தியுள்ளார் பிரதமர். தமிழர்களை பாதுகாத்ததற்காக நானும் ஒரு செங்கோலை கொடுத்தேன். செங்கோல் கொடுப்பது தவறில்லை” என்றார்.