இந்தியா

உணவகங்களில் தரக் குறைபாடு குறித்து புகாரளிக்க புகார் எண் வைக்கவும்: சென்னை உயர்நீதிமன்றம்

உணவகங்களில் தரக் குறைபாடு குறித்து புகாரளிக்க புகார் எண் வைக்கவும்: சென்னை உயர்நீதிமன்றம்

நிவேதா ஜெகராஜா

உணவுப் பொருள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களின் முன்பு சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் விவரங்களை ஒட்டுவதை உறுதி செய்யும்படி தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலப்படம் தொடர்பாக மாதிரிகள் சேகரித்து, ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது என்றும், கலப்படத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மனோகர் என்பவருக்கு சொந்தமான பலசரக்கு கடையில் விற்பனை செய்த கொத்தமல்லியில் ரசாயன கலவை, அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக சல்பர் டை ஆக்சைடுடன் கூடிய நிறக்கலவை, ஈரப்பதம் ஆகியவை இருந்ததால் அதை பாதுகாப்பற்றது என உணவு பாதுகாப்புத் துறை 2015ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து மனோகர் என்பவர் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தபோது, உணவு பாதுகாப்பு துறை தரப்பில் சென்னை மாநகர எல்லைக்குட்பட்டு 21 வழக்குகள் விசாரணையில் உள்ளதாகவும், அதில் 580 புகார்கள் ஆய்வில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் உணவு பாதுகாப்பு துறை உத்தரவை ரத்து செய்ய மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உணவு கலப்படத்தை தடுக்க தனி துறை அமைக்கப்பட்டுள்ள போதும், கலப்படம் என்பது அதிகளவில் இருப்பதாகவும், ஆகவே அத்துறையையும் அதன் செயல்பாடுகளையும் மேம்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மாதிரிகள் சேகரித்து, ஆய்வு செய்வது மட்டும் போதாது எனத் தெரிவித்த நீதிபதி, உணவு கலப்படத்தை தடுக்க, பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் உணவு கலப்படம் தொடர்பாக மக்கள் உடனடி புகார் தெரிவிக்க வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களின் முன்பு சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்ஆப் எண் அல்லது தொலைப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை வைக்க அறிவுறுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். 
மேலும் உணவு கலப்பட புகாருக்கு வெறும் அபராதம் மட்டும் விதிக்காமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது அரசு தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.