இந்தியா

9 மாநில இடைத்தேர்தல்: பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற பாஜக!

9 மாநில இடைத்தேர்தல்: பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற பாஜக!

Veeramani

மத்திய பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சியே பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்புடன் இடைத்தேர்தலை எதிர்க்கொண்ட பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நடைபெற்ற 28 தொகுதிகளில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் அதன் பலம் ஆட்சியை தக்க வைக்க தேவையான 116 உறுப்பினர்களை தாண்டி 126 உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 8 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 8 இடங்களிலும் ஆளும் பாஜக வெற்றிபெற்றது. உத்தரபிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 6 இடங்களில் ஆளும் பாஜகவும், சமாஜ்வாதி ஓர் இடத்திலும் வெற்றிபெற்றன.

கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மணிப்பூரில் 5 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்.

தெலங்கானாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற ஒரு தொகுதியில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியை பின்னுக்குத் தள்ளி பாஜக வெற்றிபெற்றது. சத்தீஸ்கர் மற்றும் ஹரியானாவில் தலா ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஓர் இடத்திலும், ஜார்க்கண்ட் முக்தி மோச்சா ஓர் இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.