ஜாம் கேட் எக்ஸ் தளம்
இந்தியா

ம.பி|பயிற்சி ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்..பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தோழி-கும்பல் அட்டூழியம்!

மத்தியப் பிரதேசத்தில் ராணுவ பயிற்சி வீரர்களும் அவர்களது தோழிகளும் தாக்கப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்திற்கு ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Prakash J

என்னதான் நாட்டில் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்களும் தாக்குதல்களும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அந்த வகையில் நாட்டு எல்லையில் காவல் காக்க பயிற்சி பெறும் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உடனிருந்தபோதே இரண்டு இளம்பெண்கள் 6 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு, அதில் ஒரு பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது மீண்டும் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் ஜாம் கேட் என்ற சுற்றுலாத் தளம் அமைந்துள்ளது. இந்த சுற்றுலாத் தளத்திற்கு மோவ் ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெறும் இரு ராணுவ வீரர்கள், தங்கள் பெண் நண்பர்களுடன் கடந்த 10ஆம் தேதி இரவு சென்றுள்ளனர்.

அப்போது 6 முதல் 7 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தாக்கியுள்ளது. அதில் பெண் ஒருவரை பணயக்கைதியாகப் பிடித்து வைத்துக்கொண்டு, ரூ.10 லட்சம் பணம் கொண்டு வரும்படி கூறி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக ராணுவத்திற்கு தகவல் தரப்பட்டது. அதன்பேரில் போலீஸுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் அந்தக் கும்பல் காரில் இருந்த அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டுத் தப்பிச் சென்றது.

இதையும் படிக்க: மாணவர்தலைவர் To இடதுசாரி சிந்தனையாளர்! நாடாளுமன்றவாதிகள் போற்றும் ஆளுமை! யார்இந்த சீதாராம் யெச்சூரி?

இதன்பின், தாக்கப்பட்ட 4 பேரும் மருத்துவப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், 2 ராணுவ அதிகாரிகளும் காயமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. பெண்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

இந்த சம்பவத்தில், புதிய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கொள்ளை, கும்பல் தாக்குதல், பாலியல் பலாத்காரம் மற்றும் ஆயுத சட்டம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் ஈடுபட்டவர்களைத் தேடி வருவதாகவும் இந்தூர் ஊரக எஸ்.பி. ஹித்திகா வசால் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் இருவர்மீது நடத்தப்பட்ட வன்முறை மற்றும் அவர்களது பெண் தோழி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தும் அளவுக்கு உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு என்பது இல்லை. பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து பாஜக அரசின் எதிர்மறையான அணுகுமுறை மிகவும் கவலையளிக்கிறது. நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், இந்தியாவின் மகள்களின் சுதந்திரம் மற்றும் லட்சியங்களுக்கு தடையாக உள்ளது. சமூகமும், அரசாங்கமும் வெட்கப்பட வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, "மத்தியப் பிரதேசத்தில் ராணுவ அதிகாரிகளை தாக்கி, பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவமும், உத்தரப்பிரதசத்தில் நெடுஞ்சாலையில் பெண் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவமும் இதயத்தை உலுக்குகின்றன.

நாட்டில் ஒவ்வொரு நாளும் 86 பெண்கள் பாலியல் மற்றும் வன்கொடுமைக்கு பலியாகின்றனர். வீட்டிலும், வெளியிலும், சாலையிலும், அலுவலகத்திலும் எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இத்தகைய கொடூரச் செயல்களால் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான பெண்களின் மன உறுதி உடைகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பாகிஸ்தானின் கடல் பகுதியில் பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. பொருளாதார நெருக்கடி குறையுமா?