போபால் எக்ஸ் தளம்
இந்தியா

ம.பி: மனைவி முன்பு ‘அங்கிள்’ என அழைப்பு.. கோபத்தில் ஜவுளிக்கடைக்காரரை தாக்கிய நபர்!

மத்தியப் பிரதேசத்தில் கடைக்காரர் ஒருவர், வாடிக்கையாளரை அவரது மனைவி முன்னிலையில் ‘அங்கிள்’ என அழைத்ததால், மோதல் முற்றியுள்ளது.

Prakash J

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் ஜட்கேடி பகுதியில் விஷால் சாஸ்த்ரி என்பவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு ரோஹித் என்பவர் தனது மனைவியுடன் கடந்த நவம்பர் 2-ம் தேதி சென்றுள்ளார்.

இந்த ஜோடி, நீண்டநேரமாக பல சேலைகளை பார்த்தும் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து கடைக்காரர் விஷால், “எவ்வளவு விலைக்கு சேலை எதிர்பார்க்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார். இதற்கு ரோஹித், “1,000 ரூபாய்க்குள் சேலையை எதிர்பார்க்கிறோம், அதற்குமேல் என்றாலும் பரவாயில்லை; காட்டுங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

இதையடுத்துப் பேசிய விஷால், “அங்கிள்... அதிக விலையுள்ள சேலையையும் காட்டுகிறேன்” எனத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ரோஹித், “மீண்டும் என்னை ‘அங்கிள்’ என்று அழைக்க வேண்டாம்” என எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதில் ஒருகட்டத்தில், ரோஹித் தனது மனைவியை அழைத்துக்கொண்டு கடையைவிட்டு புறப்பட்டுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் வேறு சில ஆட்களை அழைத்து வந்து, விஷாலை சாலையில் இழுத்து தடி மற்றும் பெல்ட்டால் சரமாரியாகத் தாக்கியுள்ளார் ரோஹித். பின் ரோஹித் உட்பட அந்நபர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், காயங்களுடன் அருகிலுள்ள காவல் நிலையம் சென்ற விஷால், ரோஹித் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, பரிசோதனைக்காக விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரோஹித் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா தேர்தல் | விலகிய மராத்தா சமூகத் தலைவர்.. பின்னணி காரணம் என்ன?