வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும், நாடு முழுவதும் இன்றும் பல வீடுகளில் அது வாங்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. தவிர, கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்கள் சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. அப்படி மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது உடலை குடும்பத்தினரே தீவைத்து கொளுத்திய சம்பவமும் அரங்கேறி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் தண்டி குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் மிதுன். இவருக்கும் ரீனா தன்வார் என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் அவர், தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் மிதுன் மற்றும் அவரது தாயார் ரீனா தன்வாரிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது.
வரதட்சணை கொடுக்காதத்டால் ஆத்திரமடைந்த மிதுன் மற்றும் அவரது தாயார், ரீனாவின் கை கால்களை வெட்டி கொலை செய்ததுடன், அவரது உடலுக்கும் தீ வைத்துள்ளனர். இதையறிந்த ஊர்க்காரர் ஒருவர் ரீனாவின் தந்தை ராம்பிரசாத் தன்வாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ரீனாவின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்து, அவர்களுடன் அந்தக் கிராமத்திற்குச் சென்றனர். இந்தச் செய்தியை அறிந்ததும் எரிந்து கொண்டிருந்த சடலத்தை விட்டுவிட்டு மிதுனின் தாயார் தப்பியோடியுள்ளார். பின்னர், ரீனாவின் குடும்பத்தினர் தீயை அணைத்து பாதி எரிந்த உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ராம்பிரசாத் தன்வார், ”என் மகளின் மாமியார் அடிக்கடி பணம் கேட்டு என் மகளை சித்திரவதை செய்தார். எனினும், பிரச்னையைத் தீர்க்க அவ்வப்போது நாங்கள் பணம் அனுப்பினோம். இந்த முறை, ’உங்கள் மகள் கொல்லப்பட்டு எரிக்கப்படுகிறார்’ என கிராமத்தில் உள்ள ஒருவரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் அங்குச் சென்று பார்த்தபோது அவள் எரிந்துகொண்டிருந்தாள். இத்தகைய செயலைச் செய்த அந்தக் குடும்பத்தினர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல் நிலையப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிரோத்தியா, ”இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் தெரிய வரும் உண்மைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மிதுன் தன்வார் மற்றும் அவரது குடும்பத்தினர் இப்போது தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.