என்னதான் இந்தியாவில் கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் இருந்தாலும் சாதிய ரீதியான தாக்குதல்கள் மட்டும் அவ்வப்போது நாடு முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. அம்மாநிலத்தில் காவல்துறை வாகனத்தை முந்திச் சென்றதாகக் கூறி, பட்டியலின நபர் ஒருவரைக் காவல்துறையினர் நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் கஜூராஹோ நகரைச் சேர்ந்தவர் ரோஹித் வால்மீகி. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இவர், துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூலை 21ஆம் தேதி, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றபோது, வழியில் காவல்துறை மற்றும் மின்சாரத் துறையினரின் வாகனங்களை முந்திச் சென்தாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவரை நிறுத்திய காவல்துறையினர் வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டியதாகக் குற்றம்சாட்டி அவரிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி காவல்நிலையத்தில் வைத்து ரோஹித் வால்மீகியை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வால்மீகியின் சகோதரர் அவரை மீட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் அகம் ஜெயின், “இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட காவலர்களின் தலையீடு இந்த விஷயத்தில் இருக்கக்கூடாது என்பதால் அவர்களை காவல்நிலையத்தை விட்டு நீக்கியுள்ளோம். சம்பந்தபட்ட நபர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.