நாய் எக்ஸ் தளம்
இந்தியா

ம.பி. | விநோத சுபாவம்.. காய்கறியே உணவு.. மனிதர்களை கடிக்கும் நபரால் அச்சத்தில் மக்கள்.. காரணம் என்ன?

மத்தியப் பிரதேசத்தில் நபர் ஒருவரை நாய் கடித்துள்ளது. அதுமுதல் அவருடைய குணங்களில் வித்தியாசம் காணப்படுவதால், அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.

Prakash J

மத்தியப் பிரதேசம் சாகர் பகுதியைச் சேர்ந்தவர் சோனு. கடந்த சில நாட்களாக இவருடைய குணங்களில் வித்தியாசம் காணப்படுவதால், அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். அதாவது, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சோனுவை நாய் ஒன்று கடித்ததாகக் கூறப்படுகிறது.

அதுமுதல்தான் அவர் இப்படி நடந்துகொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நடந்ததில் இருந்து அவர் அக்கம்பக்கத்தில் உள்ள நபர்களைத் தாக்குவது, பச்சையாக இறைச்சியை உண்பது போன்று விசித்திரமாக நடந்துவருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெறி நாய்

இதுகுறித்து காய்கறி விற்பனையாளரான முகமது ரஷீத், ”சோனுவை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று கடித்தது. அன்றுமுதல் பச்சையாகவே கறியை உண்பது, அருகில் இருப்பவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது, கடிப்பது என்று வித்தியாசமாக நடந்துகொண்டார்.

இதையடுத்து, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கி, வெளிநாய்க்கடிக்கான தடுப்பூசியை போடுவது என பல்வேறு உதவிகளை செய்தோம். இருப்பினும், அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இது உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: IPL 2025| மும்பை அணியிலிருந்து வெளியேறும் ரோகித்? ரூ.20 கோடிக்கு வாங்க தயாராகும் அணிகள்!

காய்கறி விற்பனையாளரான நரேந்திர தாக்கூர், வெங்காயம் வாங்கும்போது சோனு திடீரென தன்னை கடித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது.

நாய்

இதுகுறித்து, பண்டேல்கண்ட் மருத்துவக் கல்லூரியின் டாக்டர் சுமித் ராவத், ”சோனுவை 10 முதல் 12 நாட்களுக்கு முன்னர் நாய் கடித்திருந்தால் வெறிநாய்க்கடி நோய் மிகவும் ஆபத்தாக அமைந்திருக்கும். ஆனால், சோனு தற்போது இவ்வாறு நடந்துகொள்வதற்கு மது அருந்துவதால் ஏற்படும் உளவியல் நோய் காரணமாக இருக்கலாம். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் சோனுவிடம் இருந்து பாதுகாப்பாக தள்ளியே இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க: கே.எல்.ராகுல் நடத்திய ஏலம்.. ரூ.40 லட்சத்திற்கு ஏலம் போன விராட் கோலியின் ஜெர்சி!