மத்தியப் பிரதேசம்  முகநூல்
இந்தியா

மத்தியப் பிரதேசம் | குடும்பத்தினர் எட்டு பேரை கொலை செய்துவிட்டு, தானும் விபரீத முடிவெடுத்த இளைஞர்!

சண்முகப் பிரியா . செ

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் உள்ள மஹுல்ஜிர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட போடல் கச்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் சயாம். இவர் ஸ்கிசோஃப்ரினியா என்னும் மனப்பிறழ்வு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில்தான் கடந்த 9 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமும் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டிற்கு வந்த தினேஷ் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது தாய் ஷியாபாய், மனைவி வர்ஷா, சகோதரன் ஷ்ரவன் குமார், அவரது மனைவி பாரதோபாய், தனது சகோதரி பார்வதி மற்றும் அண்ணன் குழந்தைகள் மூன்று பேர் என மொத்தம் 8 பேரை கோடாரியால் ஒருவர் ஒருவராக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

அத்தோடு நில்லாமல் பக்கத்து வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த 10 வயது சிறுவனை தாக்கியுள்ளார். இதனைக் கண்டு அச்சிறுவனின் பாட்டி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து சிறுவனைக் காப்பாற்றியுள்ளனர்.

உடனே சுதாகரித்துக்கொண்டு தப்பித்துச் சென்ற தினேஷ் சிறிது நேரத்தில் வீட்டிற்கு சற்று தொலைவில் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்கிசோஃப்ரினியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை துன்புறுத்தும் எண்ணத்தை வளர்த்துக்கொள்வார்கள் என்பதால் அவரை அறியாமல் இந்தக் கொலைகளை செய்துள்ளார் என சொல்லப்படுகிறது. (தமிழில் வெளியான ‘3’ திரைப்படத்தில், இந்த நோயால்தான் தனுஷ் அவதிப்படுவார். மனைவி ஸ்ருதியை கொன்றுவிடக்கூடாது என்பதற்காக, இறுதியில் அவர் விபரீத முடிவெடுப்பதுபோல படத்தில் காட்டப்பட்டு இருக்கும்)

இந்நிலையில் தன் குடும்பத்தினரை தானே கொலை செய்த்ததை உணர்ந்ததும், தனது தவறுக்கு வருந்தி தானும் தற்கொலை செய்து கொண்டிருந்தார் தினேஷ் எனக் கூறப்படுகிறது. மனப்பிறழ்வு நோய்க்கு சிகிச்சைகள் உள்ளன. மனநல மருத்துவமனையில் சிகிச்சைபெறுவது மட்டுமே சரியானது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.