இந்தியா

பெங்களூரு நட்சத்திர விடுதியில் ம.பி காங். எம்.எல்.ஏக்கள் : சிக்கலில் கமல்நாத் அரசு

பெங்களூரு நட்சத்திர விடுதியில் ம.பி காங். எம்.எல்.ஏக்கள் : சிக்கலில் கமல்நாத் அரசு

rajakannan

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூருக்கு குழுவாக வந்துள்ளதாகவும் ஆகவே கமல்நாத் அரசுக்கு சிக்கல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதலே அக்கட்சிக்கு சற்றே நெருக்கடி இருப்பதாக கருதப்பட்டது. ஏனெனில் அந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் கிட்டத்தட்ட சம பலத்துடன் வெற்றி பெற்றன. மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா 109 இடங்களில் வெற்றி பெற்றது. வெறும் 5 இடங்கள்தான் வித்தியாசம். 2 இடங்களில் வெற்றி கண்ட பகுஜன் சமாஜ், 1 இடத்தில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி ஆகியவற்றின் ஆதரவுடன் தான் காங்கிரஸ் அரியணை ஏறியது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஆட்சியை கலைக்க பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டுக்களை கூறி வந்தது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பெங்களூருக்கு இன்று வந்துள்ளனர். இதனால், மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ள நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக சிலர் இவ்வாறு செய்கிறார் எனக் கூறப்படுகிறது. பெங்களூருவில் மொத்தம் 19 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும், இன்று இரவு மற்றொரு எம்.எல்.ஏ வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சிந்தியாவின் ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது. கமல்நாத்துடன் ஏற்பட்ட வேறுபாடு காரணமாகவே சிந்தியா இத்தகைய செயலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

சோனியா காந்தியுடன் கட்சியின் நிலைமை குறித்து முதலமைச்சர் கமல்நாத் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இதுபோன்ற அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பாஜகவின் மஹதேவ்புரா தொகுதி எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பவலி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கமல்நாத் அமைச்சரவை சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், சிந்தியாவின் போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்து. கடைசியில் டெல்லியில் உள்ள இல்லத்தில் சிந்தியா இருப்பது தெரியவந்தது.