மத்தியப் பிரதேசம் முகநூல்
இந்தியா

’நட்புனா என்னனு தெரியுமா’ நண்பனுக்காக ஆள்மாறாட்டம்.. 5வது தேர்வில் அலேக்காக தூக்கிய பறக்கும் படை!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத இயலாத தன் உடல்நிலை சரியில்லாத நண்பனுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 19 வயது மாணவர் வசமாக சிக்கியுள்ள சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத இயலாத தன் உடல்நிலை சரியில்லாத நண்பனுக்கு பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 19 வயது மாணவர் வசமாக சிக்கியுள்ள சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் வசித்து வருகிறார் 19 வயது நிரம்பிய சஞ்சய் பால். இவரின் 10 ஆம் வகுப்பு நண்பர் ஆதித்யா என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொது தேர்வினை எழுத இயலவில்லை. இதனால் ஹரியோம் கான்வென்ட் பள்ளி மாணவரான சஞ்சய், சிபிஎஸ்சி படிக்கும் தன் நண்பனின் சார்பாக தேர்வு எழுதியுள்ளார்.

பிஹெச்இ காலனியில் உள்ள ஹசிரா என்ற சிபிஎஸ்சி பள்ளியில் நான்கு தேர்வுகளை எந்தவித பிரச்னையும் இல்லாமல் எழுதிய சஞ்சய், 5 ஆவது தேர்வின் போது பறக்கும் படை அதிகாரிகளிடம் வசமாக சிக்கியுள்ளார்.தேர்வு அறையிலுள் வந்த அதிகாரிகள், சஞ்சயின் முகத்தையும் புகைப்படத்தில் இருந்த முகத்தையும் பார்த்தபோது, சஞ்சய்க்கு மீசை இருந்தும், புகைப்படத்தில் மீசை இல்லாமலும் இருந்துள்ளது.

மேலும் மற்ற மாணவர்களை ஒப்பிடுகையில், வயது அதிகரித்தும் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது ஆவணங்களை சோதித்து பார்த்ததில், இவரின் வயது 17 என இருந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ,தன் நண்பனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேர்வு இயலாத சூழலில் தான் தேர்வு எழுதியதை ஒப்புக் கொண்டார் சஞ்சய். இந்நிலையில் இம்மாணவர்மீது தேர்வு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாவட்ட கல்வி அலுவலர் அஜய் கட்டியார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதில், “4 தேர்வுகள் எழுதிய மாணவர் 5 ஆம் தேர்வின்போதுதான் பிடிப்பட்டுள்ளார். இதனை ஏன் அதிகாரிகள் கவனிக்கவில்லை.” என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதுவது தொடர்பான செய்திகள் வெளியாகிவரும் சூழலில் இந்த சம்பவம் இன்னும்சற்று ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.