இந்தர் சிங் பர்மர் எக்ஸ் தளம்
இந்தியா

”அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கவில்லை; இந்திய தத்துவஞானியே..” - ம.பி அமைச்சர் சர்ச்சை பேச்சு!

Prakash J

மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருப்பவர், இந்தர் சிங் பர்மர். இவர், நேற்று அம்மாநிலத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான போபாலில் உள்ள பர்கத்துல்லா விஸ்வவித்யாலயாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் அம்மாநில கவர்னர் மங்குபாய் சி படேல் மற்றும் முதல்வர் மோகன் யாதவ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அப்போது உரையாற்றிய இந்தர் சிங் பர்மர், "நமது முன்னோர்கள் அறிவு, திறமை மற்றும் திறன் ஆகிய அனைத்து அம்சங்களிலும் முன்னேறியவர்கள். நாம் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, உயர்ந்த எண்ணங்களைத் தழுவி முன்னேற முயல வேண்டும். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்பது இந்தியாவில் தேவையில்லாமல் கற்பிக்கப்படும் ஒரு பொய். இது இந்திய மாணவர்களுக்குப் பொருத்தமற்றது.

இதைக் கற்பிக்கப் போகிறார்களானால், கொலம்பஸுக்குப் பின்வந்தவர்கள் செய்த அட்டூழியங்கள், இயற்கையை வணங்குபவர்கள், சூரியனை வணங்குபவர்கள் என்று பழங்குடியின சமூகங்களை எப்படி அழித்தார்கள், படுகொலை செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதையும் கற்பித்திருக்க வேண்டும்.

ஓர் இந்திய மாலுமி 8ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்குச் சென்று, சான் டியாகோவில் பல கோயில்களைக் கட்டினார். அவை இன்னும் அங்குள்ள அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு நூலகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. நாங்கள் அங்கு சென்றபோது, ​​அவர்களின் கலாசாரத்தை, மாயா நாகரிகத்தை அதனுடன் ஒருங்கிணைத்து வளர்க்க உதவினோம். இவை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய இந்தியாவின் சிந்தனை முறை மற்றும் தத்துவம். ஏதாவது கற்பிக்கப்பட வேண்டும் என்றால், அதைச் சரியாகக் கற்பித்திருக்க வேண்டும். எனவே, நம் முன்னோர்கள்தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்கள், கொலம்பஸ் அல்ல” எனப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ ‘சாந்தனின் கப்பல், எனது கப்பலைவிட பெரியது’ என வாஸ்கோடகாமா எழுதியிருக்கிறார். கொஞ்சம் பெரியது மட்டுமல்ல, அவருடைய கப்பலைவிட இரண்டு முதல் நான்கு மடங்கு பெரியது என குறிப்பிட்டுள்ளார். வாஸ்கோடகாமா இந்திய வர்த்தகரான சாந்தனைப் பின்தொடர்ந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். ஆனால், இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா என வரலாற்றாசிரியர்கள் இந்திய மாணவர்களுக்கு தவறாகக் கற்பிக்கிறார்கள்.

ஏறக்குறைய 1,200-1,300 ஆண்டுகளாக, புவியியல் தவறான கருத்துகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிடத்தக்க பொய் உலகம் முழுவதும் நிலைத்திருக்கிறது. போலந்து வானியலாளர் கோபர்நிக்கஸின் கோட்பாடான, ’சூரியன் நிலையானது. கலிலியோ சொன்னது சூரியன் நிலையானது மற்றும் பூமி உட்பட அனைத்து கிரகங்களும் அதைச் சுற்றி வருகின்றன’ என்பது.

ஆனால், இது நமது பண்டைய நூல்களில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ரிக்வேதத்தை எழுதியவர்கள், சந்திரன் தனது தாய்க் கிரகமான பூமியைச் சுற்றி வருவதாகவும், பூமி அதன் பெற்றோரான சூரியனைச் சுற்றி வருவதாகவும் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளனர். அதாவது, நமது முன்னோர்கள் ஏற்கெனவே சூரியனை நிலையானதாகக் கருதினர். பூமி, சந்திரன் மற்றும் மற்ற அனைத்துக் கிரகங்களும் அதைச் சுற்றி வருகின்றன.

சுவாரஸ்யமான வரலாற்று உண்மை என்னவென்றால், 12ஆம் நூற்றாண்டில், பெய்ஜிங் நகரம் நிறுவப்பட்டபோது, ​​அதன் வடிவமைப்புகளும் கட்டடக்கலைகளும் இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு கட்டடக் கலைஞரால் உருவாக்கப்பட்டது. ஆனால், அது அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. பால் பாஹு என்று பெயரிடப்பட்ட அந்தக் கட்டடக் கலைஞர், புத்தர் மற்றும் ராமர் சிலைகளை உருவாக்குவதிலும், பிரமாண்டமான கட்டடங்களை வடிவமைப்பதிலும் பெயர்பெற்றவர். பெய்ஜிங்கை வடிவமைக்க அவர் அழைக்கப்பட்டார். இன்றும்கூட, பால் பாகுவின் பங்களிப்புகளை அங்கீகரித்து, அரசாங்கத்தால் பெய்ஜிங்கில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது” எனப் பேசினார்.

இதற்குமுன்பும் அவர் இதுபோல் பேசியிருக்கிறார். இந்த நிலையில், இவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, “மாநிலத்தில் உள்ள பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள உண்மையைத் திருத்த வேண்டுமா” என்ற கேள்விக்கு, ​​அமைச்சர் பர்மர், “வாஸ்கோடகாமா இந்தியாவைக் கண்டுபிடிக்கவில்லை என்பது வரலாற்றில் சுயமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது; நாங்கள் அதை அகற்றுவோம். வாஸ்கோடகாமாவின் நாடு உருவாவதற்கு முன்பே இந்தியா இருந்தது, அதனால் இந்தியாவைக் கண்டுபிடிப்பது என்ற கேள்வியே எழாது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர், “இந்திய வர்த்தகர்கள் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் வணிகம் நடத்தினர். அவர்கள் அமெரிக்காவில் ஒரு சூரிய கோயிலையும் கட்டினார்கள். இதன் அடிப்படையில், இந்திய வர்த்தகர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகக் கூறலாம்; இது கொலம்பஸுக்கு முன்பே இருந்தது” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.