ம.பி. பெண் ட்விட்டர்
இந்தியா

ம.பி | பாலியல் புகாரை திரும்பப் பெற மறுப்பு.. பாதிக்கப்பட்ட பெண் உட்பட ஒரே குடும்பத்தில் மூவர் கொலை?

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நீதிக்காகப் போராடிய பட்டியல் இன குடும்பம் ஒன்றில் மூன்று உயிர்கள் பறிபோயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

மத்தியப் பிரதேச மாநிலம் சாகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் (அப்போது சிறுமி), கடந்த 2019ஆம் ஆண்டு தன்னை பாஜகவைச் சேர்ந்த 4 பேர் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அடித்து மிரட்டியதாகவும் குடும்பத்தினருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு (2020) முன்பு, இவ்விவகாரம் அரசியல் கட்சிகளிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்தப் பிரச்னையை காங்கிரஸ் கையில் எடுத்திருந்தது. பின்னர் தேர்தலுக்குப் பிறகு குற்றஞ்சாட்டப்பட்ட குடும்பத்தினர், அந்தப் பெண்ணிடம் சென்று புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளனர். ஆனால், அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிலர் அந்தப் பெண்ணின் 18 வயது சகோதரனை அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவத்தின்போது அப்பெண்ணின் தாயாரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார்.

இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 9 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டதுடன், சிலர் கைதும் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கடந்த மே 25ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமாவிடம், எதிர்தரப்பு வாபஸ் பெறச் சொல்லி வற்புறுத்தி உள்ளது. அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் இருதரப்புக்கு ஏற்பட்ட மோதலில், எதிர்தரப்பு பெண்ணின் மாமாவை அடித்துத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம்பட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸில் கொண்டு வந்துள்ளனர். அதாவது, மாமாவின் உடலுடன் பாதிக்கப்பட்ட பெண் உடன் வந்துள்ளார்.

உடலைக் கொண்டுசெல்ல 20 கிலோ மீட்டர் தொலைவு இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண், ஆம்புலன்ஸின் வேனின் கதவைத் திறந்து குதித்து இறந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அவர் ஆம்புலன்ஸ் வேன் கதவைத் திறந்து குதிக்கவில்லை. ஆம்புலன்ஸ் வருகையின்போது ஏதோ மர்மம் நடந்துள்ளது. இதனாலேயே அந்தப் பெண் உயிரிழந்துள்ளார் எனக் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிக்க:குழந்தைகளுடன் க்ருணால் பாண்டியா.. இன்ஸ்டா பதிவுக்கு ஹர்திக் மனைவி புன்னகை எமோஜி!

பாதிக்கப்பட்ட பெண் இறந்தது குறித்து அவரது சகோதரர் ஒருவர், “ஆம்புலன்ஸ்க்குள் அமர்ந்திருந்த அவர் எப்படி சாலை விபத்தில் இறக்க முடியும்? அவள் தற்கொலை செய்துகொள்வதை விரும்புபவர் அல்ல. தவிர, ஆம்புலன்ஸ் ஏன் வழக்கத்திற்கு மாறான பாதையில் சென்றது. ஆக, இதில் ஏதோ மர்மம் அடங்கியுள்ளது. மேலும் எதிர்தரப்பிடம் எங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டே இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், இவ்விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. பாலியல் விவகார வழக்கைத் திரும்பப் பெறாததற்காக, ஒரே குடும்பத்தில் ஒரு வருடத்திற்குள் 3 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது மத்தியப் பிரதேசத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு மீதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி சிபிஐ விசாரணை கோரியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “எங்கு பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டாலும், குற்றம்சாட்டப்பட்டவர்களை நரேந்திர மோடி ஜி மற்றும் அவரது அரசு காப்பாற்றி வருகிறது. அட்டூழியங்கள் இழைக்கப்பட்ட சகோதரிகள் நீதி கேட்டால், அவர்களது குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன” என தனது எக்ஸ் தளத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவருடைய இந்தப் பதிவுக்குப் பிறகு இச்சம்பவம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. எனினும், இதுகுறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்த வழக்கை விசாரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. யாரும் தப்ப மாட்டார்கள். நாங்கள் சட்டப்படி செயல்படுகிறோம். இந்த சம்பவத்தை வைத்து காங்கிரஸ் பிரித்து ஆட்சி செய்கிறது. குடும்பத்துக்கு நீதி கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: India Head Coach| “தோனி வந்தால் சிறப்பாக இருக்கும்..” - குறிவைக்கும் விராட் கோலியின் குரு!