4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட மத்தியப் பிரதேச சுகாதாரத்துறையில் பணியாற்றும் 89 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முதல் நாள், அதாவது மார்ச் 23ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பா.ஜ.க.வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றுக் கொண்டார். தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பதவியேற்பு விழா நடந்ததாக அப்போதே புகார் எழுந்தது.
அன்றைய தினம் சிவராஜ் சிங் சவுகான் மட்டும்தான் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களாக யாரும் பதவியேற்கவில்லை. அதனால், தளபதி இல்லாத படையைப்போல சுகாதார அமைச்சரின்றி கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போரிட்டு வருகிறது மத்தியப்பிரதேசம்.
வேறு ஆள் இல்லாததால் சுகாதாரத்துறையை கவனித்து வரும் சிவராஜ் சிங் சவுகான் அதிகாரிகளை பெரிதும் நம்பியிருந்தார். ஆனால் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 85 ஊழியர்கள் என சுகாதாரத்துறையைச் சேர்ந்த 89 பேருக்கு கொரோனா தொற்றிக்கொண்டது. இதனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டது. சுகாதாரத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி காவல்துறையைச் சேர்ந்த 40 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் 1090 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 55 பேர் உயிரிழந்துவிட்டனர். தனி ஒரு ஆளாக கொரோனோ பரவலை எப்படி தடுக்கப் போகிறார் சவுகான் என்பது பலருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது