இந்தியா

ம.பி: மகனின் தேர்வுக்காக 106 கி.மீ. சைக்கிளில் அழைத்துச் சென்ற அன்புத் தந்தை

ம.பி: மகனின் தேர்வுக்காக 106 கி.மீ. சைக்கிளில் அழைத்துச் சென்ற அன்புத் தந்தை

webteam

மத்தியப் பிரதேச மாநிலம், சொந்த கிராமத்தில் இருந்து பத்தாம் வகுப்பு துணைத் தேர்வை எழுதுவதற்கு தன் மகனை சைக்கிளில் 106 கி.மீ. அழைத்துச் சென்ற ஒரு தந்தையின் செயல் மக்களிடம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. எல்லையற்ற அந்த எளிய மனிதரின் பேரன்பு மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

தார் மாவட்டம், மனவார் தேசில் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளி சோபாராம். கணிதம் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளை எழுதுவதற்காக மகன் அசீஸை அழைத்துக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டார். கூடவே மூன்று நாள் சாப்பாட்டுக்கு ரொட்டிகளையும் எடுத்துக் கொண்டார்கள்.

"நான் ஒரு தினக்கூலி தொழிலாளி, என் மகனுக்கு சிறந்த வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவனுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால், அதற்கு எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். எதுவும் அவனை தடைப்படுத்திவிடக்கூடாது " என்கிறார் சோபாராம்.

அசீஸ், அவருடைய மூத்த மகன். பத்தாம் வகுப்புத் தேர்வில் மூன்று பாடங்களில் தோல்வியடைந்தார். அடுத்த முயற்சியாக ரூக் ஜனா நாகின் என்ற கல்வித் திட்டத்தின் மூலம் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பித்தார். ஆனால் தேர்வுமையம் சொந்த ஊரில் இருந்து 106 கி. மீ. தொலைவில் தார் நகரத்தில் இருந்தது பிரச்னையாக உருவெடுத்தது. ஊரடங்கால் போக்குவரத்து வசதிகளும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி சைக்கிள் மட்டும்தான்.

ஒரு நண்பரிடம் 500 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு குடும்பத்தினரின் பிரார்த்தனையுடன் தந்தையும் மகனும் திங்களன்று மாலையில் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினர். இரவில் மட்டும் கோயில்கள் போன்ற இடங்களில் இருவரும் தங்கிக்கொண்டார்கள். தேர்வு மையம் செல்லும் வழியில் தென்பட்ட ஊர்களில் மக்கள் உணவும் தங்குமிடமும் கொடுத்து அவர்களை உபசரித்துள்ளனர்.

செவ்வாயன்று தேர்வு முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர் அசீஸுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. தந்தையையும் மகனையும் வரவேற்க அரசு அதிகாரிகள் காத்திருந்தனர். பின்னர் இருவருக்கும்  உணவிட்டு ஊருக்குச் செல்லவும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தினர். சோபாராமின் சைக்கிள் பயணம் பற்றி முன்னாள் முதல்வர் கமல்நாத், "சோபாராமின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.