பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு தகுந்த தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் வலியுறுத்தினர்.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த புதன்கிழமை பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அதேபோல, தமிழ்நாட்டின் கோவையில் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவங்களால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எழுப்பப்பட்டது.
இதுகுறித்து மக்களவையில் கரூர் எம்பி ஜோதிமணி, “கோவையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன் 100க்கும் அதிகமான பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். தாக்கப்பட்டனர், வீடியோ எடுக்கப்பட்டனர். அதனை காட்டி மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்து அதனை வைத்து மிரட்டி பெண்களை மீண்டும், மீண்டும் வன்கொடுமைக்கு ஆளாக்கினர்.
குற்றவாளிகள் தலைமறைவாகவுள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை காவல்துறை வெளியிட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்று மிரட்டுவதே நோக்கம். ஓவ்வொரு நொடியும், நிமிடமும், நாளும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் இது” எனத் தெரிவித்தார்.
இதேபோல மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன், “இதுபோன்ற குற்றவாளிகளுக்கு ஆண்மை பறிப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். கொரியா, கலிஃபோர்னியா, அமெரிக்கா, அலபாமா போன்ற நாடுகளில் செய்வது போல் பாலியல் வன்கொடுமை குற்றம் புரிபவர்களுக்கு ஆண்மை பறிப்பு செய்ய வேண்டும். அதற்காக ஆகும் செலவை அவர்களின் சொத்துக்களை முடக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி குற்றவாளிகளிடம் பணம் இல்லாமல் இருந்தால், அந்தந்த மாநிலங்களில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன், “சொல்வதற்கே கஷ்டமாக இருக்கிறது. மற்ற நாடுகளில் இருப்பது போல் இதுபோன்ற குற்றம் புரிந்தவர்களை பொதுவெளியில் நிற்கவைத்து கொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார். மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, “இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க போதிய சட்டங்கள் உள்ளன. ஆகவே புதிய சட்டங்கள் தேவையில்லை. ஆனால் அதை செயல்படுத்தும் துணிவும், நிர்வாக திறனும் இருந்தால் போதும். சமூகத்தில் மனமாற்றம் ஏற்பட்டால் இதுபோன்ற கொடுமையை தடுத்து விடலாம்” எனத் தெரிவித்தார்.