உறுப்பு மாற்று சிகிச்சையில் நேரம் மிகமிக முக்கியமானது. சமீபத்தில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்த நோயாளிக்கு புனேயில் மூளைச்சாவு ஏற்பட்ட நபரிடமிருந்து நுரையீரல் நன்கொடையாகப் பெறப்பட்டது. இதை ஒரு மணிநேரத்தில் செய்துமுடிக்க போக்குவரத்துத் துறையைச் சார்ந்த வெவ்வேறு அதிகாரிகள் கலந்து ஆலோசித்து சிறப்பாக செய்துள்ளனர்.
நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கிம்ஸ் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று நிறுவனத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் தனது பெயரை தெலுங்கானா அரசின் ஜூவந்தன் திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒரு இளைஞனின் குடும்பத்தினர் உறுப்பை தானம் செய்ய முன்வந்தனர். அதே சமயம் புனே மண்டல மாற்று ஒருங்கிணைப்பு மையம்(ZTCC), மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்பு சரியான நேரத்தில் ஹைதராபாத்தை அடைவதை உறுதி செய்தது.
தெலுங்கானாவின் ஜீவந்தன் பொறுப்பாளராக இருக்கும் டாக்டர் ஸ்வர்ணலதா, இதை ஆதரித்து வழநடத்தினார். அதே நேரத்தில் புனே மத்திய ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி கோக்லேயும் தடையின்றி செயல்பட உறுதி அளித்தார். இதனால் புனேவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் நுரையீரல் கொண்டுவரப்பட்டது. இரு நகரங்களின் போக்குவரத்து போலீஸாரும் ஒரு பச்சைநிற நடைபாதையை ஏற்பாடு செய்தனர். இந்திய விமான நிலைய ஆணையமும் இந்த செயலுக்கு உதவி முன்வந்தது.
ஒரு மணிநேரத்திற்குள், புனேவிலிருந்து 560கி.மீ தொலைவில் இருக்கும் கிம்ஸ் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று நிறுவனத்திற்கு நுரையீரல் கொண்டுவரப்பட்டு அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தூறைகளின் முயற்சியால்தான் இது சாத்தியமானதாக பலரும் பாராட்டியுள்ளனர்.