இந்தியா

’ 10 வருடங்களுக்கு முன்பு மகளையும் கொன்றேன்’ - மகனையே கொன்ற தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்

’ 10 வருடங்களுக்கு முன்பு மகளையும் கொன்றேன்’ - மகனையே கொன்ற தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்

Sinekadhara

பஞ்சாபிலுள்ள ஒரு கிராமத்தில் தனது 4 வயது மகனை கொன்று மூட்டை கட்டி குளத்தில் போட்ட ஒரு கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 10 வருடங்களுக்கு முன்பு தனது 6 வயது மகளையும் தான் கொலை செய்ததாக அந்த பெண் ஒத்துக்கொண்டுள்ள சம்பவம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பபிதா(45). இவர் திருமணமாகி பஞ்சாபிலுள்ள முல்லன்புர் தகாவிற்கு உட்பட்ட பனோகார் கிராமத்தில் கணவருடன் வசித்துவருகிறார். இவருடைய கணவர் ஷாம் லால் அதே பகுதியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைவைத்து நடத்திவருகிறார். கடந்த வியாழக்கிழமை இவர்களுடைய 4 வயது மகன் காணாமல் போயுள்ளான். ஷாம் லால் மனைவியிடம் விசாரித்தபோது, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனை கடைசியாக பார்த்ததாகக் கூறியிருக்கிறார் பபிதா.

இந்நிலையில் காணாமல்போன சிறுவன் குறித்து போலீசார் விசாரிக்க தொடங்கியதில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்திருக்கின்றனர். அப்போது பபிதா தனது தலையில் ஒரு சாக்குமூட்டையை வைத்து தூக்கிக்கொண்டு கிராமத்திற்கு வெளியே செல்வதை பார்த்திருக்கின்றனர். தனது மனைவியே குழந்தையை கொன்றிருக்கலாம் என்ற பயத்தில் ஷாம் லால் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் துணை ஆய்வாளர் சுக்ஜிந்தர் சிங் விசாரணையை தொடங்கினார். பபிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தனது மகனை தானே கழுத்தை நெரித்து கொலைசெய்ததை ஒத்துக்கொண்டார். மேலும் உடலை சாக்குப்பையில் போட்டு கட்டி தலையில் வைத்து தூக்கிக்கொண்டு சென்றதாகவும், பிறகு பக்கத்திலிருந்த குளத்தில் உடலை போட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மேலும் அவரிடம் விசாரித்ததில் அவர்களுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி காத்திருந்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுடைய 6 வயது மகளை தானே கொலைசெய்ததாகவும், மேலும் இருமுறை கர்ப்பமுற்றிருந்தபோது கனமாக சாதனத்தைக்கொண்டு கடுமையாக தனது வயிற்றில் தானே அடித்து கருக்களை கலைத்ததாகவும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சுக்ஜிந்தர் சிங் கூறுகையில், அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனது மகளை எப்படி கொலைசெய்தார் என்பதை அந்த பெண் வெளிப்படையாக கூறவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இருப்பினும் பபிதா மீது இந்திய சட்டப்பிரிவு 302 மற்றும் 201இன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.