உத்தரபிரதேசத்தில் ஒரு வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த 13 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் ராகுல். பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது ஒரு வயது பெண் குழந்தையான ரீத்து, நேற்று வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. இதனிடையே, குழந்தையின் சத்தம் சிறிது நேரம் கேட்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு குழந்தை இல்லாததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவர்கள் அந்தப் பகுதி முழுவதும் தேடிப் பார்த்த போதிலும் குழந்தை ரீத்து கிடைக்கவில்லை. இதையடுத்து, அலிகஞ்ச் காவல் நிலையத்தில் கேசவ் ராகுல் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பள்ளி மைதானத்தில் குழந்தை ரீத்து அணிந்திருந்த சட்டை கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளி முழுவதையும் சல்லடை போட்டு போலீஸார் தேடினர். இதில், அந்தப் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் ரீத்துவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலும், குழந்தையின் கால்களில் செங்கற்களும் கட்டப்பட்டிருந்தன. எனவே இது கொலைதான் என முடிவுக்கு வந்த போலீஸார், அந்தப் பகுதியில் உள்ள அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேசவ் ராகுலின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 13 வயது சிறுவன் சுரேஷின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேச்சில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, சுரேஷிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், குழந்தை ரீத்துவை கொலை செய்ததை அவன் ஒப்புக் கொண்டான். மேலும் அவன் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, ஒரு வாரத்துக்கு முன்பு சுரேஷ் தனது சைக்கிளை, கேசவ் ராகுலின் வீட்டு வாசலுக்கு அருகே நிறுத்தியிருக்கிறான். இதனால் ஆத்திரமடைந்த கேசவ் ராகுல், சுரேஷை அழைத்து அவனை அறைந்துள்ளார். மேலும், சிறுவனின் பெற்றோரையும் தகாத வார்த்தைகளால் கேசவ் ராகுல் திட்டியுள்ளார். தன் கண் முன்னே தனது பெற்றோரை திட்டியதால் ஆத்திரமடைந்த சிறுவன் சுரேஷ், கேசவ் ராகுலை பழிவாங்க முடிவெடுத்திருக்கிறான். அதன்படி, நேற்று கேசவ் ராகுலின் குழந்தை ரீத்து வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த சுரேஷ், ரீத்துவை தூக்கிச் சென்று உடைகளை களைந்து பள்ளியின் தண்ணீர் தொட்டியில் வீசியிருக்கிறான். மேலும், குழந்தை தப்பித்துவிட கூடாது என்பதற்காக அதன் கால்களில் செங்கற்களையும் சுரேஷ் கட்டி இருக்கிறான்.
சுரேஷின் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட பின்னர், போலீஸார் அவனை கைது செய்தனர். அவனை சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலிகஞ்ச் காவல் உதவி ஆணையர் சையது அலி அப்பாஸ் தெரிவித்தார்.