இந்தியா

காங்கிரஸில் காதல்; பாஜகவில் விவாகரத்து... மேற்கு வங்க ஜோடியின் பின்னணி இதுதான்!

காங்கிரஸில் காதல்; பாஜகவில் விவாகரத்து... மேற்கு வங்க ஜோடியின் பின்னணி இதுதான்!

webteam

மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூர் தொகுதி பா.ஜ.க எம்.பி இருப்பவர் சவுமித்ரா கான். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சவுமித்ரா கான், கடந்த ஜனவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்தபோதே பிஷ்ணுபூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வெற்றியும் பெற்றார். கூடுதலாக பாஜகவின் இளைஞரணித் தலைவர் பதவியும் சில மாதங்களில் தேடி வந்தது. இதற்கிடையே, இவரின் மனைவி சுஜாதா மொண்டல் கான் சில நாட்களுக்கு முன் பாஜகவில் இருந்து விலகி, திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

சவுமித்ரா 2010-இல் காங்கிரசில் உறுப்பினராக இருந்தபோது, ஓர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருந்தார் சுஜாதா. அப்போது தான் இருவரின் சந்திப்பும் நடந்தது. அதில் இருந்து இருவரும் நெருக்கமாகப் பழகினர். இதனால் அந்தக் காலக்கட்டங்களில் சவுமித்ரா சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் சுஜாதா காணப்பட்டார். ஒரு 'தூண்' போல நின்று சவுமித்ராவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

சவுமித்ரா கான் - சுஜாதா இருவரும் வன கிராமங்களான சால்டோரா மற்றும் பார்ஜோராவிலிருந்து வந்தவர்கள். அவை மேற்கு வங்கத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான பாங்குராவில் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. அரசியலில் பணியாற்றுவதற்காக கல்லூரியை விட்டு வெளியேறிய சவுமித்ரா, ஆரம்பத்தில் காங்கிரசில் சேர்ந்து பஞ்சாயத்து மட்டத்தில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் திரிணாமுலுடன் கூட்டணி வைத்திருந்தபோது, சவுமித்ரா பாங்குராவில் உள்ள கோட்டுல்பூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியானது சுஜாதாவை சந்தித்த ஒரு வருடம் கழித்து கிடைத்தது. 2012-இல், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியபோது, அதன் எம்.எல்.ஏக்கள் பலர் திரிணாமுலில் இணைந்தனர். அவர்களில் ஒருவராக சவுமித்ரா திரிணாமுலில் இணைந்தார். 2014 ஆம் ஆண்டில், பிஷ்ணுபூரிலிருந்து எம்.பி.யாக தனது முதல் பதவியை வென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுஜாதாவும் கானும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்தத் திருமணத்துக்கு சுஜாதாவின் வீட்டில் சம்மதம் இல்லை. குடும்பத்தை எதிர்த்துதான் திருமணம் செய்துகொண்டார். அன்றிலிருந்து இரண்டு நாட்கள் முன்புவரை சவுமித்ராவின் அனைத்துமாக இருந்தார் சுஜாதா. இதனிடையே கடந்த ஆண்டு சவுமித்ரா, பாஜகவில் இணைந்தார்.

2019-இல் சவுமித்ராவுக்கு பிஷ்ணுபூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது, ஒரு சங்கடமும் வந்துசேர்ந்தது. குற்ற வழக்கின் ஒன்றின் காரணமாக சவுமித்ரா பிஷ்ணுபூர் தொகுதியில் நுழைய தடை விதித்தது நீதிமன்றம். இதனால் அவரால் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள முடியாத சூழல். ஆனால், சவுமித்ரா வராவிட்டாலும் அவரின் மனைவி சுஜாதா வீதி வீதியாக பிரசாரம் செய்தார். கிராமங்கள் உட்பட தொகுதி முழுவதும் பயணம் செய்து, தனது கணவருக்கு ஆதரவாக பொதுப் பேரணிகளில் உரைகளை நிகழ்த்தினார். இதன்காரணமாக மூத்த திரிணாமுல் தலைவர் ஷியாமால் சாந்த்ராவை 78,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் சவுமித்ரா.

அந்தசமயத்தில் சுஜாதாவும் பாஜக உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பாஜக தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் பங்கேற்றவர் ஆவார். இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுஜாதா மோண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகினார்.

திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தது தொடர்பாக, "நான் சுவாசிக்க விரும்புகிறேன். எனக்கு மரியாதை வேண்டும். நான் ஒரு திறமையான கட்சியின் தலைவராக இருக்க விரும்புகிறேன். எனது அன்பான தீதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். பாஜகவில் புதிதாக சேர்க்கப்பட்ட, தவறான மற்றும் ஊழல் தலைவர்களுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனது கணவர் ஒரு நாள் உணர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன். அவர் ஒரு நாள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வருவார் என நம்புகிறேன்" என்றார் சுஜாதா.

ஆனால் சுஜாதா அப்போது ஓர் அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மறுநாள் செய்தியாளர்களைச் சந்தித்த சவுமித்ரா கான், ``நான், அவருக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறேன். எங்களின் 10 வருட உறவு முடிவுக்கு வருகிறது. அரசியல் எங்களது 10 ஆண்டு கால எங்கள் திருமண பந்தத்தை முறித்துவிட்டது. எனது வீட்டின் லட்சுமி திருடப்பட்டிருக்கிறார். விவாகரத்துக்கான ஆவணங்களை அனுப்பிவைக்கிறேன். அவற்றில் கையெழுத்திட்டு அனுப்புங்கள். எனது குடும்பப் பெயரான 'கான்'-ஐ இனி பயன்படுத்தாதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அவர் என்னை விட்டு வெளியேறி, துன்புறுத்துபவர்களுடன் கைகோக்க முடிவு செய்தார். நான் அவரை உண்மையாகவும் முழு மனதுடனும் நேசித்தேன். கடந்த 10 ஆண்டுகளில் வேறு எந்த பெண்ணையும் பற்றி நான் நினைத்ததில்லை. நான் அவருக்கு மிகுந்த அன்பையும் கவனிப்பையும் கொடுக்க முயற்சித்தேன், அவர் மாறிவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் நான் தோல்வியடைந்தேன். பாஜகவுக்கு நான் கடுமையாக உழைப்பேன். நான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைய மாட்டேன்" என்று கண்ணீருடன் பேசினார்.

ஆனால், ``என்னை விவாகரத்து செய்வது அவருடைய முடிவு. சுஜாதா மொண்டல் என எனது அடையாளத்தை உருவாக்குவேன். எனது குடும்பத்தின் விருப்பத்துக்கு மாறாக சவுமித்ராவைத் திருமணம் செய்துகொண்டேன். அவரை நான் நேசிக்கிறேன். எப்போதும் அப்படியே நேசிப்பேன். எனது நெத்தியில் குங்குமம் அப்படியேதான் இருக்கிறது. அரசியல் காரணமாக குடும்ப உறவு விவகாரத்தில் முடியுமா?" என்றார். சமீபகாலமாக மேற்குவங்க அரசியல் களம் அனல்பறந்து வரும் நிலையில், குடும்பங்களைப் பிரிக்கும் அளவுக்கு தற்போது மோசமாகி இருப்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.